காங்கிரஸ் தலைவரானதுமே களேபரம்... வாண்டடாக அன்புமணி, சீமானை வம்பிழுத்த மாணிக்கம் தாகூர்...!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் கடும் விமர்சனங்களுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்வைத்துள்ள கேள்விகளுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவியேற்றுள்ள மாணிக்கம் தாகூர் எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்.
அன்புமணி ஆவேசம்:
செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாமக தலைவர் அன்புமணி, மரியாதைக்குரிய ராகுல் காந்தி அவர்களிடம் நான் கேட்க விரும்பும் கேள்வி இதுதான். அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் மத்திய அரசு அறிவித்துள்ள கிரேட் நிக்கோபார் திட்டம் (Great Nicobar Project) இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது என்று கூறப்படுகிறது. குறிப்பாக, சீனாவின் ஆதிக்கத்தை சமநிலைப்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் முக்கியமான மூலோபாய (Strategic) பலனை அளிக்கும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
இதையும் படிங்க: இன்று பதவியேற்கிறார் மாணிக்கம் தாகூர்! ராகுல் காந்தியை பிரதமராக்குவதே அடுத்த இலக்கு என உறுதி!
இந்தத் திட்டத்தின் கீழ், கிரேட் நிக்கோபார் தீவின் ஒரு பகுதியில் விமான நிலையம், துறைமுகம், கண்டெய்னர் முனையம் உள்ளிட்ட கட்டமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன. மலாக்கா நீரிணைக்கு (Strait of Malacca) மிக அருகில் அமைந்துள்ள இந்தப் பகுதி, சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எனவே, இந்தத் திட்டம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் உதவும் என கூறப்படுகிறது.
ஆனால், இந்தத் திட்டத்தை ராகுல் காந்தி எதிர்த்தார். சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், வனப்பகுதிகள் அழிக்கப்படும் என்பதையே அவர் காரணமாகக் கூறினார். அப்படியானால், கர்நாடகாவில் சுமார் 12,500 ஏக்கர் காப்புக்காடு (Reserve Forest) பகுதிகள் பாதிக்கப்படும் எனக் கூறப்படும் மேகதாது திட்டத்தை ராகுல் காந்தி ஏற்றுக்கொள்வாரா? அங்கு புலிகள், யானைகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வாழ்கின்றன. அந்த வனப்பகுதி அழிக்கப்படுவதை அவர் ஆதரிப்பாரா? இந்தக் கேள்வியை மக்கள் ராகுல் காந்தியிடம் கேட்க வேண்டும்.
அந்தமானுக்கு ஒரு நீதி, கர்நாடகாவுக்கு ஒரு நீதியா? சட்ட ரீதியாகவும், சுற்றுச்சூழல் ரீதியாகவும் இது தவறான அணுகுமுறை. கர்நாடகாவில் உள்ள பல சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், நிபுணர்களும் மேகதாது திட்டத்தை எதிர்த்து வருகிறார்கள். இருப்பினும், தேர்தல் அரசியலை முன்னிறுத்தி அந்தத் திட்டத்தை செயல்படுத்த முயற்சி நடைபெறுகிறது.
மேகதாது திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) ஆரம்பத்தில் ஏற்கப்படவில்லை. பின்னர் வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது. அப்போது, விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்கலாம்; ஆனால் அதுவே திட்டத்துக்கு இறுதி அனுமதி கிடைத்ததாக பொருள் கொள்ளக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது என்றார்.
மாணிக்கம் தாகூர் பதிலடி:
நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், "மேகதாது திட்டத்தில் வனங்கள் அழியும் என்று ராகுல் காந்தி குரல் கொடுக்கிறார். ஆனால் கிரேட் நிக்கோபார் திட்டத்தில் அதே அளவிலான எதிர்ப்பை தெரிவிக்கவில்லை" என்று கூறியுள்ளார்.
அதற்கு பதிலளிக்க விரும்புகிறேன். டாக்டர் அன்புமணி அவர்களே, ராகுல் காந்தி என்ன கூறியிருக்கிறார், நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள்?
அந்தமானில் மிகப்பெரிய துறைமுகம் அமைப்பதற்காக சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள். அது பிரதமர் மோடி முன்னெடுக்கும் திட்டம் என்பதால் சரி என்கிறீர்கள். அதே தர்க்கத்தைப் பயன்படுத்தி, மேகதாது அணையை டி.கே. சிவக்குமார் முன்னெடுப்பதால் அதுவும் சரிதான் என்று கூற முடியுமா?
எங்களைப் பொறுத்தவரை, இரண்டுமே தவறு. ஒருவர் செய்தாலும் தவறு; மற்றொருவர் செய்தாலும் தவறு. இதில் தேவையில்லாமல் ராகுல் காந்தியை ஏன் இழுக்க வேண்டும்?
ராகுல் காந்தி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் விருப்பத்திற்கும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பதாகவே தொடர்ந்து கூறி வருகிறார். எங்களைப் பொறுத்தவரை, மேகதாது அணை கட்டப்படக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். உயர்கல்வித்துறை அமைச்சர் கூறியதுபோல், அந்த அணைக்காக ஒரு செங்கல்லைக்கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் என்பதே எங்கள் நிலைப்பாடு.
எனவே, அன்புமணி அவர்களாக இருந்தாலும், சீமான் அவர்களாக இருந்தாலும், யார் காங்கிரஸை தேவையின்றி விமர்சித்தாலும் அதற்கு உரிய பதிலை நாங்கள் வழங்குவோம்.
இதையும் படிங்க: #BREAKING: தமிழ்நாடு காங். தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்..! அதிரடி அறிவிப்பு..!!