திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று: 2026 சட்டமன்றத் தேர்தல் வியூகம் குறித்து ஸ்டாலின் ஆலோசனை!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் இப்போதே தங்கள் ‘ஆயுதங்களை’ கூர்மைப்படுத்தத் தொடங்கிவிட்டன. இதன் ஒரு பகுதியாக, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தபடி, இன்று மாலை 6:30 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், தேர்தல் தொடர்பான அதிரடி முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக ‘அறிவாலய’ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டத்தின் முக்கிய ‘அஜெண்டா’ 2026 தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்ததாக இருக்கும் எனத் தெரிகிறது. ஏற்கனவே விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளிடையே சில சலசலப்புகள் நிலவி வரும் வேளையில், கூட்டணியை வலுவாக வைத்திருப்பது குறித்து ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளார். மேலும், "200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி" என்ற இலக்கை அடைய, ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள், பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ‘பரப்புரை வியூகம்’ குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு! புதிய அறிவிப்புகள் வெளியாகுமா?
குறிப்பாக, எதிர்க்கட்சிகளான அதிமுக மற்றும் பாஜகவின் வியூகங்களை முறியடிக்கவும், புதிதாகக் களம் கண்டுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் தாக்கத்தைக் குறைக்கவும் திமுக சில ரகசிய திட்டங்களை வகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், மாலையில் நடைபெறும் இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தமிழக அரசியலில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கூட்டத்தின் முடிவில், தேர்தலுக்கான முக்கியப் பொறுப்பாளர்கள் நியமனம் அல்லது பொதுக்கூட்டங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் எனத் தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: 2026 தேர்தல் களம்! ஜனவரி 20-ல் திமுக மாசெக்கள் கூட்டம்.. துரைமுருகன் அறிவிப்பு!