“97 லட்சம் பெயர் நீக்கம்” – முதல்வர் தலைமையில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் கூட்டம் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுக தனது தேர்தல் பணிகளை பரபரப்பாக செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில், இன்று மாலை 6 மணி அளவில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற உள்ளது.
தமிழகத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், சுமார் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதிரடியாக நீக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இரட்டைப் பதிவுக் கொண்டவர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் விளக்கமளித்தாலும், தகுதியான வாக்காளர்களின் பெயர்களும் விடுபட்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இந்தச் சூழலில் நடைபெறும் இன்றைய கூட்டத்தில், விடுபட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்கும் பணிகளைத் துரிதப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக, ஒவ்வொரு தொகுதியிலும் சிறப்பு முகாம்கள் அமைத்து, படிவங்களை நிரப்ப மக்களுக்கு உதவுமாறு நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்துவார் என்று கூறப்படுகிறது.
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மட்டுமின்றி, 2026 தேர்தலுக்கான தொகுதி வாரியான கள நிலவரங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. பலவீனமாக உள்ள தொகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அதிரடி மாற்றங்கள், அரசின் சாதனைத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் உள்ள தொய்வுகள் ஆகியவற்றைச் சரிசெய்ய மாவட்டச் செயலாளர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டச் செயலாளர்களுடன் சேர்த்து நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் என அனைவரும் இந்தக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் எனப் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுகவின் இந்த உள்கட்சி ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: திமுகவுக்கு தாவிய 30 தவெகவினர்..!! செங்கோட்டையன் கோட்டைக்குள் நுழைந்த செந்தில் பாலாஜி..!!
இதையும் படிங்க: "விஜய் பேசுவது அடுக்கு மொழி அல்ல, அது துடுக்கு மொழி!" – தமிமுன் அன்சாரி விமர்சனம்!