×
 
☰

எஸ்.ஐ.ஆர். விவகாரம்: மோடி வழியில் முதல்வர் விஜய்யும் மௌனம் காப்பதா? மு.வீரபாண்டியன் ஆவேசம்!

எஸ்.ஐ.ஆர். தேர்தல் ஆணைய முறைகேடு விவகாரத்தில் பிரதமர் மோடி பாணியில் முதல்வர் விஜய்யும் மௌனம் காக்கக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளில் (SIR) நடைபெற்றுள்ள முறைகேடுகளைக் கண்டித்தும், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே இடதுசாரி மாணவர் அமைப்புகள் நடத்திய 'ஜந்தர் மந்தர் 2.0' கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

நேற்று இரவோடு இரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் காவல்துறை கைது செய்த நிலையிலும், இன்று 2-வது நாளாக டி.ஒய்.எப்.ஐ (DYFI), எஸ்.எப்.ஐ (SFI), ஏ.ஐ.எஸ்.எப் (AISF) உள்ளிட்ட இடதுசாரி மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பெருந்திரளாகக் கூடித் தேர்தல் ஆணையத்தைக் கண்டித்துக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மாணவர் ஆர்ப்பாட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மு.வீரபாண்டியன், தலைமை தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் போராடி வரும் மாணவர்களுக்கு ஒருமைப்பாடு தெரிவிக்கும் வகையில் ஜனநாயகத்தின் குரலாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகத் தெரிவித்தார். நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளும் மாணவர்களும் முன்னெடுக்கும் ஜனநாயகப் போராட்டங்களை மதித்துத் தலைமை தேர்தல் ஆணையரை ஒன்றிய அரசு நீக்க வேண்டும் என்றும், இதற்கு முதலமைச்சர் விஜயும் தனது கண்டனக் குரலை வலுவாக எழுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மக்களின் வாக்குரிமையைப் பறித்ததன் மூலமாக நாட்டின் குடியுரிமையை மட்டுமல்லாது தேசத்தின் ஆன்மாவையே ஒன்றிய அரசு படுகொலை செய்துவிட்டதாகவும், இதற்குப் பிரதமர் மோடியும் ஒன்றிய அரசும் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் சாடினார்.

இதையும் படிங்க: நீலாங்கரை டூ R.A புரம்..!! வீட்டை மாற்றுகிறாரா CM விஜய்..?? என்ன காரணம் தெரியுமா..??

சென்னையில் நடைபெற்ற தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக மற்றும் இடதுசாரிகளுடன் இணைந்து ஆளும் தவெகவும் வெளிநடப்பு செய்தது வரவேற்கத்தக்க ஒன்று என்றாலும், அது மட்டுமே போதுமானதல்ல என்றும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் களப் போராட்டங்களிலும் முதலமைச்சர் விஜயும் தமிழக வெற்றிக் கழகமும் நேரடியாகப் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும், ஜனநாயக முறைப்படி போராடுவதற்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மதித்து போராட்டங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் நடைபெறுவது காவல்துறை ஆட்சி அல்ல என்பதை அரசு உணர வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் பிரதமர் மோடியைப் போல் எதுவும் நடக்காதது போல முதலமைச்சர் மௌனம் காக்கக் கூடாது எனவும், தமிழ்நாட்டின் அதிகாரக் குறியீடான முதலமைச்சர் அநீதிகளுக்கு எதிராகத் துணிந்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

கோவை பீளமேடு பள்ளி மாணவர் அகிலன் தற்கொலை விவகாரம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், உணவு என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் சார்ந்த உரிமை என்றும், தனிநபரின் உணவுப் பழக்கங்களில் சாதிய ரீதியாகத் தலையிடுவது எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல என்றும் தெரிவித்தார். மேலும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எப்போதும் பாதுகாப்பான அரணாகத் திகழ வேண்டும் என்றும் மு.வீரபாண்டியன் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: முதல்வர் விஜய்யுடன் போட்டியா..?? தனுஷின் அரசியல் நகர்வு திருப்புமுனையாகாது..!! ஒரே போடாக போட்ட அமைச்சர்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share