×
 

விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் பெயரில் பண மோசடி?... சவுக்கு சங்கர் வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு...!

ரத்தன் பண்டிட் பெயரையும், அவருக்கு இருப்பதாக கூறப்படும் அரசியல் மற்றும் திரையுலக தொடர்புகளையும் பயன்படுத்தி பல்வேறு நபர்களிடம் பணம் வசூலித்து ஏமாற்றும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக அவரது தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அந்த ஆடியோவில் பேசும் நபர், தன்னை ஜோதிடர் ரத்தன் பண்டிட் என அறிமுகப்படுத்திக் கொள்கிறார். மேலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தற்போதைய முதலமைச்சர் விஜய் மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வரின் மகள் கவிதா உள்ளிட்டோருக்கு ஜோதிடம் பார்த்துள்ளதாகவும் அவர் கூறுவது போன்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

அதுமட்டுமின்றி, தமிழக முதலமைச்சர் விஜயுடன் தனக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதாகக் கூறும் அந்த நபர், தமிழக அரசு டெண்டர்கள் உள்ளிட்ட பணிகளை முடித்துக் கொடுக்க முடியும் என்றும், முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாகவும் பேசுவது போன்ற தகவல்கள் ஆடியோவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஆடியோவில் பேசுவது உண்மையான ரத்தன் பண்டிட் அல்ல என்றும், அவரது பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் ரத்தன் பண்டிட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திரிஷா வீட்டை மையமாக வைத்து அப்பாவு கிளப்பிய சர்ச்சை… பின்னணி என்ன?

ரத்தன் பண்டிட் பெயரையும், அவருக்கு இருப்பதாக கூறப்படும் அரசியல் மற்றும் திரையுலக தொடர்புகளையும் பயன்படுத்தி பல்வேறு நபர்களிடம் பணம் வசூலித்து ஏமாற்றும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக அவரது தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடராகவும், நடிகர் விஜய்யின் ஜோதிட ஆலோசகராகவும் ரத்தன் பண்டிட் அறியப்படுவதாகவும், ஆந்திர முன்னாள் முதல்வரின் மகள் கவிதாவுக்கும் அவர் ஜோதிட ஆலோசனை வழங்கி வருவதாகவும் அவரது தரப்பு குறிப்பிட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் வசிக்கும் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கும் அவர் ஆலோசனை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் அரசியல் எதிர்காலம் தொடர்பாகவும் ரத்தன் பண்டிட் முன்கூட்டியே கணித்ததாக அவரது தரப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது அவர் வெளிநாட்டில் இருப்பதை பயன்படுத்திக் கொண்டு, சிலர் அவரது அடையாளத்தை போலியாக பயன்படுத்தி பண மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

விஜய்யுடனான தொடர்பை களங்கப்படுத்த முயற்சியா?

முதலமைச்சர் விஜய்யுடனான ரத்தன் பண்டிட்டின் நெருக்கத்தை தவறாக சித்தரித்து அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்திலும் இத்தகைய செயல்கள் நடைபெறுவதாக சந்தேகம் எழுந்துள்ளதாக அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

ரத்தன் பண்டிட் பெயரை பயன்படுத்தி பணம் பெறுவது மட்டுமின்றி, இதுபோன்ற செயல்களால் அவருடைய நற்பெயருக்கும் பாதிப்பு ஏற்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக, அரசு டெண்டர்கள், அரசியல் தலைவர்களை சந்திக்க ஏற்பாடு செய்வது போன்றவற்றை செய்து தருவதாகக் கூறி பணம் கேட்பவர்கள் குறித்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யாரேனும் இதுபோன்ற பெயர்களை பயன்படுத்தி பணம் கோரினால், முதலில் அவர்களின் அடையாளம் மற்றும் அதிகாரப்பூர்வ தொடர்புகளை உறுதி செய்த பின்னரே பணப் பரிவர்த்தனையில் ஈடுபட வேண்டும் எனவும் ரத்தன் பண்டிட் தரப்பு வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையே, ரத்தன் பண்டிட் பெயரில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் போலி வாட்ஸ்-அப் எண்களின் புகைப்படங்களையும் அவரது தரப்பினர் வெளியிட்டுள்ளனர். சவுக்கு சங்கர் வெளியிட்ட ஆடியோவும், அதனைத் தொடர்ந்து வெளியாகியுள்ள இந்த குற்றச்சாட்டுகளும் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களை கண்டறிந்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரத்தன் பண்டிட் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தினாலும்., கதறினாலும் கட்டுமரக் கதை எடுபடாது..! திமுகவை கிண்டலடித்த தவெக..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share