×
 

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி! 32 பேருக்கு மட்டுமே அரசுப்பணி!! காரணம் இதுதான்!

கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்துக்கு அரசுப் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பங்கேற்று, இன்று பணி ஆணைகளை வழங்கவிருக்கிறார்.

கரூரில் தவெக கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் முக்கிய நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. கடந்தாண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது தமிழகத்தில் முதல்வராக உள்ள விஜய், தேர்தல் வாக்குறுதியின்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி இன்று கரூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் 32 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை அவர் நேரில் வழங்குகிறார். நிகழ்ச்சிக்குப் பிறகு திருச்சிக்கு சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரும் மொத்தம் 36 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அந்த 36 குடும்பங்களில் தற்போது 32 குடும்பங்களுக்கு மட்டுமே பணி ஆணை வழங்கப்படுகிறது. இதனால் மற்ற 4 குடும்பங்கள் ஏன் பட்டியலில் இடம்பெறவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க: முதல்வர் விஜய் ஆட்சியில் டிஜிட்டல் புரட்சி! ஸ்லைடு, வீடியோ தயாரிப்பாளர்களுக்கு திடீர் டிமாண்ட்!

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின்படி, உயிரிழந்த ஒரு பெண்ணின் கணவர் காவல்துறையில் பணியாற்றி வருவதால், அந்த குடும்பத்துக்கு கூடுதல் அரசு வேலை வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப்படுகிறது. மற்றொரு குடும்பத்தில், வேலை நியமன ஆணையை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பாக குடும்ப உறுப்பினர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதால், அந்த குடும்பத்தின் பெயர் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், உயிரிழந்த அஜிதா என்ற பெண்ணின் சகோதரர் பெங்களூரில் சொந்த தொழில் செய்து வருவதால், அவர் அரசுப் பணியை ஏற்க விருப்பம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. அதேபோல், மற்றொரு உயிரிழந்தவரின் பெற்றோர் வயது முதிர்ந்தவர்களாக இருப்பதால், அவர்களது குடும்பத்துக்கும் தற்போது அரசு வேலை வழங்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, இந்த விபத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கும் தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டிருந்தது. தமிழக அரசும் தனியாக நிவாரண உதவி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி பேரம்!! திரைமறைவில் கரூர் கம்பெனி! சிக்கும் செந்தில்பாலாஜி?!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share