இன்று தாக்கலாகிறது வேளாண் பட்ஜெட்... சி.எம்.விஜயிடம் விவசாயிகள் எதிர்பார்ப்பது என்ன?
தவெக தலைவர் விஜய் முதல்வரான பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் வேளாண் பட்ஜெட் என்பதால் விவசாயிகள் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
2026–27 ம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட் இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட்டை தமிழக வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்ய உள்ளார்.
தவெக தலைவர் விஜய் முதல்வரான பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் வேளாண் பட்ஜெட் என்பதால் விவசாயிகள் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் 5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருப்பவர்களின் பயிர்க்கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் என்றும், அதற்க்கும் மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீதம் வரை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியது. ஆனால் இதனை நிறைவேற்றவில்லை. ரூ.75,000 வரை கடன் பெற்றவர்களுக்கு மட்டுமே முழு கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இன்று கடன் தள்ளுபடி தொடர்பான கூடுதல் அறிவிப்புகள் வெளியாகுமா? என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தமிழர்கள்..! ஊக்கத் தொகை வழங்கி வாழ்த்திய முதல்வர் விஜய்..!!
அதேபோல நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ. 3,500 ஆகவும், கரும்பு டன்னுக்கு ரூ. 5,000 ஆகவும் உயர்த்தி வழங்குதல், உழவர்களுக்கு உரிமைத் தொகையை உயர்த்தி வழங்குவது உள்பட புதிய அறிவிப்புகளை அரசு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கூறி காத்துள்ளனர்
பொள்ளாச்சி, ஆனைமலை, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் தெற்கு மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை மற்றும் பனை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. எனவே கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்பது அப்பகுதி விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. எம்.ஜி.ஆர் கொண்டு வந்த பழம்பெரும் சட்டத்தை ரத்து செய்து தென்னை விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கையை முதலமைச்சர் விஜய் நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள ஒவ்வொரு விவசாயிக் குடும்பத்திற்கும் விதைப்புக் கால நிதியுதவியாக ஆண்டுக்கு 15,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் தவெக வாக்குறுதி அளித்திருந்தது. இந்தத் தொகை ஜூலை - ஆகஸ்ட் மற்றும் ஜனவரி - பிப்ரவரி ஆகிய 2 பருவங்களில் தலா 2 தவணைகளாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றைய பட்ஜெட் உரையில் இடம்பெறுமா என விவசாயிகள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.
ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகள் மற்றும் நிலமற்ற ஏழைக் குடும்பங்களின் பிள்ளைகள் மருத்துவம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி உட்பட அனைத்து வகை உயர்கல்விச் செலவையும் அரசே ஏற்கும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. விவசாயிகளின் பெருங்கனவான தங்களது பிள்ளைகளின் கல்வி குறித்த எதிர்பார்ப்பை அரசு நிறைவேற்றுமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
இதையும் படிங்க: மீன்பிடி தடை கால நிவாரணத் தொகை குறைப்பு..? மீனவர்கள் அதிருப்தி..! விளக்கிய TN FACT CHECK..!!