அடிதூள்...!! - வெற்றி வாகை சூடிய விஜய்... வெளிநாடு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு புதிய சாதனை...!
தமிழ்நாட்டில் முதலீட்டு உயர்வுக்கு சேவைத்துறை, உற்பத்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏற்பட்ட முதலீடுகள் முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகின்றன.
அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் தமிழ்நாடு புதிய சாதனை படைத்திருக்கிறது. 2026-27ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், இந்திய மாநிலங்களிலேயே அதிக அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்த மாநிலமாக தமிழ்நாடு முதலிடம் பிடித்திருக்கிறது.
மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை எனப்படும் DPIIT வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்த மூன்று மாதங்களில் தமிழ்நாடு 5.95 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்திருக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் ரூ.55 ஆயிரம் கோடியாகும்.
தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா 4.22 பில்லியன் அமெரிக்க டாலரும், டெல்லி 2.67 பில்லியன் டாலரும், கர்நாடகா 2.11 பில்லியன் டாலரும், குஜராத் 1.30 பில்லியன் டாலரும் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளன.
இதையும் படிங்க: கூச்சமே இல்லாம எப்படி பேச முடியுது CM சார்? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!
இந்திய அளவில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் மொத்த அந்நிய நேரடி முதலீடு 19.81 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 6 சதவீதம் அதிகமாகும். மறுமுதலீடு செய்யப்பட்ட வருவாய் மற்றும் பிற மூலதனத்தையும் சேர்த்தால், மொத்த அந்நிய முதலீடு 30.65 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் முதலீட்டு உயர்வுக்கு சேவைத்துறை, உற்பத்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏற்பட்ட முதலீடுகள் முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகின்றன.
இதற்கிடையே, முதலமைச்சர் விஜய்யின் சமீபத்திய லண்டன் பயணம் குறித்தும் அரசியல் ரீதியாக விமர்சனங்கள் எழுந்திருந்தன. ஆறு நாள் பயணமாக லண்டன் சென்ற முதலமைச்சர் விஜய், அங்கு தொழில் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.
இந்த பயணம் தொடர்பாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர். குறிப்பாக, வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்ப்பதை விட தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கும் தொழில் நகரங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கருத்தை பாஜகவைச் சேர்ந்த அண்ணாமலை உள்ளிட்டோர் முன்வைத்துள்ளனர்.
இந்த நிலையில், லண்டன் பயணத்தின் முடிவில் தமிழ்நாட்டிற்கு சுமார் ரூ.15,300 கோடி மதிப்பிலான முதலீட்டு உறுதிமொழிகள் கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது. இந்த முதலீடுகள் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
இதில், ஆட்டோ உதிரிபாகங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சார கட்டமைப்பு உபகரணங்கள் மற்றும் குளோபல் கேபபிலிட்டி சென்டர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனம் சென்னையில் சுமார் ரூ.1,000 கோடி மதிப்பில் குளோபல் கேபபிலிட்டி சென்டர் அமைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இதன் மூலம் 2,000-க்கும் மேற்பட்ட உயர்மதிப்பு வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குழுமம் சென்னை மற்றும் திருச்சியில் தனது குளோபல் கேபபிலிட்டி சென்டர் செயல்பாடுகளை விரிவுபடுத்த உள்ளதாகவும், இதன் மூலம் சுமார் 600 வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனம் திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் ரூ.300 கோடி மதிப்பில் மின்மாற்றி உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஒருபுறம் லண்டன் பயணம் தொடர்பாக அரசியல் விமர்சனங்கள் எழுந்த நிலையில், மறுபுறம் தமிழ்நாடு 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்திய மாநிலங்களிலேயே அதிக அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்த மாநிலமாக முதலிடம் பிடித்திருப்பது தற்போது கவனம் பெற்றுள்ளது.
லண்டன் பயணத்தின் மூலம் கிடைத்த முதலீட்டு உறுதிமொழிகளும், அதே காலகட்டத்தைத் தொடர்ந்து வெளியாகியுள்ள FDI தரவுகளும் தமிழகத்தின் முதலீட்டு சூழல் தொடர்பான விவாதத்தை மீண்டும் முன்னிலைக்கு கொண்டு வந்துள்ளன.
இதையும் படிங்க: பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ அக்.11-ல் திறப்பு! ஒரே மேடையில் பிரதமர் மோடி - முதலமைச்சர் விஜய்!