வடகிழக்கு பருவமழை எதிரொலி! அலர்ட் மோடில் முதல்வர் விஜய்! இன்று 2-வது நாளாக ஆலோசனை!
முதலமைச்சர் விஜய் இன்று 2-வது நாளாக மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகங்களுடன் தமிழக அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் விஜய் இன்று 2-வது நாளாக மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துறை சார்ந்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சாய்குமார் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். மாவட்ட ஆட்சியர்களும் காணொலி வாயிலாக கூட்டத்தில் இணைந்துள்ளனர்.
முதல் நாளில் காவிரி டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், இன்று தேனி, தென்காசி, கரூர், விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ஈரோடு, கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் நிலவரம் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!
வடகிழக்கு பருவமழை காலத்தில் கனமழை காரணமாக ஏற்படக்கூடிய வெள்ளம் மற்றும் நீர்த்தேக்கம் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகங்கள் தயாராக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து கூட்டத்தில் கவனம் செலுத்தப்படுகிறது. குறிப்பாக, நீர்நிலைகளை தூர்வாருதல், மழைநீர் செல்லும் கால்வாய்கள் மற்றும் வழித்தடங்களில் உள்ள தடைகளை அகற்றுதல், ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பணிகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
அதேபோல், மழை மற்றும் வெள்ளம் போன்ற பேரிடர் சூழ்நிலைகள் ஏற்பட்டால் பொதுமக்களை விரைவாக மீட்பது, தேவையான இடங்களில் நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருப்பது, மீட்பு உபகரணங்களை முன்கூட்டியே தயார் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, தமிழகத்தில் டெங்கு பாதிப்பு தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளும் கூட்டத்தில் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. மழைக்காலத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுப்பது, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் சுகாதாரத் துறையின் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைப்பொழிவை கொண்டு வரும் முக்கியமான பருவமாக இருப்பதால், பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்பே மாவட்ட நிர்வாகங்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இந்த தொடர் ஆலோசனைகளின் முக்கிய நோக்கமாக உள்ளது.
மழை தொடங்குவதற்கு முன்பே நீர்நிலைகள், வடிகால்கள், சாலைகள், மீட்பு உபகரணங்கள் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருப்பது, மழைக்கால பாதிப்புகளை குறைக்க உதவும் என்பதால், மாவட்ட அளவிலான பணிகளின் நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவில்லை! சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!