×
 

வெள்ளை அறிக்கையால் திருப்தியில்லை? அதிகாரிகளிடம் அதிருப்தி தெரிவித்த முதல்வர் விஜய்!!

தமிழக நிதிநிலை குறித்து, வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில், மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய தகவல்களை தெரிவிக்காதது, முதல்வர் விஜயிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை: தமிழக அரசின் நிதிநிலை தொடர்பாக சமீபத்தில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து விவாதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அந்த அறிக்கையின் உள்ளடக்கம் குறித்து முதல்வர் விஜய் அதிருப்தி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு, முந்தைய ஆட்சிக்கால நிதிநிலை குறித்து விரிவான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நிதித்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் மாநிலத்தின் கடன் நிலை, நிதிப்பற்றாக்குறை மற்றும் பொருளாதார சவால்கள் குறித்து விவரங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் எதிர்பார்க்கப்பட்ட சில முக்கிய தகவல்கள் அதில் இடம்பெறவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அரசு வட்டாரங்களில் வெளியாகும் தகவல்களின்படி, முந்தைய ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் நிதி முறைகேடுகள், திட்ட ஒப்பந்தங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் நிதி மேலாண்மை குறித்த விரிவான தகவல்கள் அறிக்கையில் தெளிவாக இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அறிக்கையின் அரசியல் தாக்கம் குறைந்துவிட்டதாகவும் சிலர் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: ஒன்றிய அரசு! தந்தை பெரியார்! அம்பேத்கார்!! உரையை மாற்றாமல் படித்த ஆளுநர் அர்லேகர்! சுமூக தொடக்கம்!

மேலும், தமிழகத்தின் மொத்தக் கடன் அளவு குறித்து அரசின் தரப்பில் வலுவான விளக்கங்கள் வழங்கப்படவில்லை என்ற கருத்தும் எழுந்துள்ளது. இதன் காரணமாக வெள்ளை அறிக்கையை தயாரித்த அதிகாரிகளிடம் முதல்வர் விஜய் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.

இதற்கிடையில், சட்டப்பேரவை விவாதங்களின் போது வெள்ளை அறிக்கையில் இடம்பெறாத சில முக்கிய தகவல்களை முதல்வர் தனது பதிலுரையில் விளக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் முந்தைய ஆட்சியின் நிதி நிர்வாகம் தொடர்பான கூடுதல் விவரங்கள் வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

மறுபுறம், முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெள்ளை அறிக்கையை விமர்சித்துள்ளார். மாநிலத்தின் கடன் உயர்வுக்கு மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதி தாமதம் மற்றும் ஜி.எஸ்.டி. மாற்றங்களே முக்கிய காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய அரசு தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமெனில் அதிகளவு நிதி தேவைப்படும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

வெள்ளை அறிக்கையைச் சுற்றியுள்ள இந்த விவாதம், வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முக்கிய அரசியல் விவாதமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இது விஜய் மாடல் அரசு!! எதிர்காலம் பத்திரமா இருக்கு! புன்னகையால் மாற்றத்தை ஏற்படுத்தியவர் முதல்வர்! புகழாரம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share