மக்களே தயாரா?... ஊட்டி மலர் கண்காட்சி குறித்து வெளியானது முக்கிய அறிவிப்பு... முதல்வர் விஜய் தொடங்கிவைக்க திட்டம்?
உதகையில் உள்ள பிரசித்தி பெற்ற அரசு ரோஜா பூங்காவில் மே 14-ந்தேதி ரோஜா கண்காட்சி தொடங்க உள்ளதாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
மலைகளின் அரசி என அழைக்கப்படும் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் கோடை சீசன் காலமாகும். அப்போது நிலவும் இதமான காலநிலையில் சுற்றுலா தலங்களை பார்த்து ரசிப்பதற்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமாக. அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக கோடை விழா நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
குறிப்பாக மே மாதம் முதல் வாரத்திலேயே காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கும் நிலையில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் காரணமாக ரோஜா கண்காட்சி, தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி மற்றும் மலைப்பயிர்கள் கண்காட்சி ஆகிய கண்காட்சிகள் மட்டுமே நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்தாண்டு 128-வது மலர் கண்காட்சிக்காக சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் 275 வகையான மலர் விதைகள் மற்றும் செடிகள் ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பெறப்பட்டன. இதன்மூலம் மலர் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு, பூங்காவில் பல்வேறு பகுதிகளில் 10 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. தற்போது, மலர் செடிகளில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
இதையும் படிங்க: நொடிக்கு நொடி பரபரப்பு... செங்குத்தாக பிளந்த அதிமுக..! TVK ஆதரவு MLA க்களை சந்தித்த முதல்வர் விஜய்..!
அதன்படி கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிக்கும் வகையில் ரோஜா பூங்காவில் வரும் 14ஆம் தேதி காலை உதகை அரசு ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி தொடங்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி 18ஆம் தேதி மாலை நிறைவடையும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு 3 நாட்கள் நடத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 5 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் மலர் கண்காட்சியை முதல்வர்களாக இருந்த ஜெயலலிதா, பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்துள்ளனர்.தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று நடக்கும் முதல் அரசு நிகழ்ச்சி என்பதால், ஊட்டி மலர் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக, முதல்வர் விஜய்யை அழைக்க தோட்டக்கலைத் துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: சத்தியமூர்த்தி பவனில் முதல்வர் விஜய்..! உற்சாக வரவேற்பு கொடுத்த காங்கிரஸ் நிர்வாகிகள்..!