எம்.ஜி.ஆர். பாணியில் விஜய் அதிரடி திட்டம்! மேகதாது அணை - காவிரி விவகாரத்தில் கையில் எடுக்கும் புதிய ஆயுதம்!
காவிரி பிரச்னைக்கு, பேச்சுவார்த்தை வாயிலாக தீர்வு காண, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பாணியை பின்பற்றி முதல்வர் விஜய் கர்நாடகா செல்ல உள்ளார்.
காவிரி நீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் முயற்சியாக, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பாணியை பின்பற்றி தமிழக முதல்வர் விஜய் கர்நாடகா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவிரி நீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரை சந்தித்து பேச அவர் திட்டமிட்டுள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகாவில் ஹேரங்கி, ஹேமாவதி, கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) உள்ளிட்ட அணைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த அணைகளில் சேமிக்கப்படும் நீரில் இருந்து ஆண்டுதோறும் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் கிடைப்பதை கண்காணிக்க காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் நீர் திறப்பு தொடர்பாக தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து வருகின்றன.
இதையும் படிங்க: கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கும் முதல்வர் விஜய்!! மேகதாது அணை விவகாரம்! தவெக புது ரூட்!!
காவிரி விவகாரத்தில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மூலம் தமிழகத்தின் உரிமைக்காக போராடி பல்வேறு உத்தரவுகளை பெற்றனர். அதே நேரத்தில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தனது ஆட்சிக் காலத்தில் கர்நாடகா சென்று அப்போதைய முதல்வர்களை சந்தித்து நேரடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
தற்போது அதே அணுகுமுறையை முதல்வர் விஜய் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஆகஸ்ட் 3-ம் தேதி பெங்களூரு செல்லும் அவர், தலைமைச் செயலர் சாய்குமார், நீர்வளத்துறை செயலர் சத்யபிரதா சாஹு மற்றும் ஆலோசகர்களுடன் கர்நாடக முதல்வரை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் காவிரி நீர் திறப்பு மற்றும் மேகதாது அணை திட்டம் ஆகிய முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அணை கட்டும் திட்டத்தில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வரும் நிலையில், தமிழக அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதுகுறித்து தமிழக வேளாண் துறை அமைச்சர் வினோத் கூறுகையில், மேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது என்றும், காவிரி தமிழகத்தின் உரிமை என்றும் தெரிவித்துள்ளார். காவிரி நீர் தொடர்பாக தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளை முதல்வர் விஜய் கர்நாடக முதல்வரிடம் வலியுறுத்துவார் என்றும் அவர் கூறினார்.
கர்நாடக தரப்பில் மழைப்பொழிவு குறைவு உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து நீர் திறப்பில் தயக்கம் காட்டப்படும் சூழலில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் புதிய அணுகுமுறையை உருவாக்க முடியுமா என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் மற்றும் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ஆகஸ்ட் 5 வரை வெயிட் பண்ணுங்க.. பட்ஜெட்டில் செம ட்விஸ்ட் இருக்கு! அமைச்சர் மரிய வில்சன் தகவல்!