×
 
☰

குறையும் வருவாய்... பெருகும் சுமைகள்... விஜய் அரசை விளாசிய கிருஷ்ணசாமி..!!

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தவெக அரசு மீது விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, விஜய் அரசு குறித்து கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். 107 சட்டமன்ற உறுப்பினர்களுடன் நம்பிக்கைக்குப் பாத்திரமற்ற சில அரசியல் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சிப் பொறுப்பேற்ற விஜய் அரசு, ஐந்து மாதங்கள் நிறைவடையும் நிலையில் உள்ளது. பூரண மதுவிலக்கு, ஊழலற்ற ஆட்சி உள்ளிட்ட எண்ணற்ற வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசு, கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாமல் தள்ளாடி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் முதலமைச்சர் வரை நிர்வாக அனுபவமின்மை, அரசின் பல செயல்பாடுகளிலும் தெளிவாக வெளிப்படுவதாக கிருஷ்ணசாமி குறிப்பிட்டார். தினமும் நடைபெறும் கொலைச் சம்பவங்கள், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள், மக்களின் போராட்டங்கள் ஒருபுறம் இருப்பதாகவும், இன்னொருபுறம் தொடர் மின்வெட்டு காரணமாக சிறுகுறு தொழில்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை சுய மின் உற்பத்தியை மட்டும் நம்பி செயல்படும் அவல நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த குறைபாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பொருளாதார வளர்ச்சியை முடக்கத் தொடங்கியுள்ளதாக அவர் எச்சரித்தார்.கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களின் வரி வருவாயை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஒரு சதவீதக் குறைவும், செப்டம்பரில் ஜிஎஸ்டி வரி வருமானம் ஐந்து சதவீதமும் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். பல மாநிலங்களில் வருவாய் பன்மடங்கு பெருகியிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் இத்தகைய சரிவு ஏற்பட்டிருப்பது கவலைக்குரியது என்றார். அக்டோபர், நவம்பர் மாதங்களில் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பது தெரியவில்லை எனவும் அவர் கவலை தெரிவித்தார்.

இதையும் படிங்க: மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சியா?... வன்னியரசு மன்னிப்பு கேள்... கொந்தளிக்கும் கிருஷ்ணசாமி...!

இந்த நிலை தொடர்ந்தால் பணப்புழக்கம் பெருமளவில் குறைந்து பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், பலருக்கு வேலைவாய்ப்புகள் பறிபோக வாய்ப்புள்ளதாகவும் கிருஷ்ணசாமி எச்சரித்தார். படுத்துக் கிடக்கும் இந்த அரசை யார் தட்டியெழுப்புவது, எங்கிருந்து தட்டியெழுப்புவது என்ற கேள்வியை எழுப்பிய அவர், தலை எங்கே இருக்கிறது, கால் பகுதி எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விமர்சித்தார். ஒரு ஆரோக்கியசாமியும் ஒரு விஷ்ணு பிரசாத்தும் அரசை நடத்த முற்பட்டால் இதுபோன்ற விளைவுகள்தான் ஏற்படும் எனக் கேள்வி எழுப்பினார்.

 

இதையும் படிங்க: வந்தாச்சு இடைத்தேர்தல்..! தெறிக்கும் தாராபுரம்... முதல்வர் விஜய் ரோடு ஷோ..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share