×
 

ஜனநாயகன் விஜய்க்கு கை கொடுக்கும் காங்.,! வரிசை கட்டும் தலைவர்கள்! திமுகவுக்கு எதிராக ப்ளான்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. இதற்காக, காங்கிரஸ் குரல் கொடுத்திருப்பது திமுகவை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவருமான விஜய் நடித்த கடைசித் திரைப்படமான ஜனநாயகன் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) இன்னும் சான்றிதழ் வழங்காததால் பட வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தாமதத்துக்கு மத்திய அரசு வேண்டுமென்றே அரசியல் செய்வதாக விஜய் தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவான இப்படம் அரசியல் ஆக்ஷன் திரில்லர் வகையைச் சேர்ந்தது. பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சுமார் 500 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இப்படத்துக்கு டிசம்பர் 18 ஆம் தேதி தணிக்கைக்கு விண்ணப்பிக்கப்பட்டது. ஆரம்பக் குழு சில காட்சிகளை நீக்கி யு/ஏ சான்றிதழ் வழங்க பரிந்துரைத்தது. படக்குழு அவற்றைச் செய்தும் சான்றிதழ் கிடைக்கவில்லை.

பின்னர் ஜனவரி 5 ஆம் தேதி மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டதாக தணிக்கை வாரியம் தெரிவித்தது. இதற்கு மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் குறித்த புகார் காரணம் என்று கூறப்பட்டது. இதனால் படக்குழு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றம் ஜனவரி 7 ஆம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது. இதனால் ஜனவரி 9 வெளியீடு சாத்தியமில்லை என்பதால் படக்குழு வெளியீட்டைத் தள்ளிவைத்துள்ளது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜனநாயகனுக்கு முட்டுக்கட்டை..! படைப்பு சுதந்திரத்திற்கு எதிரானது... போர்க்கொடி தூக்கிய ஜோதிமணி..!

இந்தச் சர்ச்சையில் திமுக அமைதி காத்து வருகிறது. தவெகவை அரசியல் எதிரியாகக் கருதும் திமுகவினர் இந்தத் தாமதத்தை வேடிக்கை பார்ப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி திமுகவின் கூட்டணிக் கட்சி என்றாலும், ஜனநாயகனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளது. இது திமுகவுக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பதிவில், "ஆர்எஸ்எஸ் பிரச்சாரப் படங்கள் தோல்வியடைந்ததால், சினிமா துறையைக் கட்டுப்படுத்த முயல்கிறது மத்திய அரசு. பேச்சுரிமை, கருத்துச் சுதந்திரத்தை அச்சத்தின் மூலம் பலவீனப்படுத்துகிறது. தணிக்கை வாரியம் அரசியல் ஆயுதமாக்கப்பட்டுள்ளது. கலை அதிகாரத்துக்கு அடிபணியும்போது ஜனநாயகம் நிலைக்காது" என்று விமர்சித்தார்.

மற்றொரு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ஒருபடி மேலே போய், "ஜனநாயகனுக்கு சான்றிதழ் மறுப்பது தமிழ்த் திரையுலகத்தின் மீதான தாக்குதல். இது படைப்புச் சுதந்திரத்துக்கு எதிரானது. தணிக்கை வாரியம் மோடி அரசின் அரசியல் ஆயுதமாகிவிட்டது. இந்த டிஜிட்டல் யுகத்தில் தணிக்கை வாரியமே காலாவதியானது. அதைக் கலைக்க வேண்டும்" என்று கூறினார். ஆபாசக் காட்சிகளுக்கு சான்றிதழ் கொடுக்கும் வாரியம் அரசியல் காரணங்களுக்காக இப்படி செய்வதை எதிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

காங்கிரஸ் தலைவர்கள் இவ்வாறு விஜய்க்கு ஆதரவாகப் பேசியது திமுகவினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணியில் இருந்துகொண்டு "எதிரிக்காக" குரல் கொடுப்பதை திமுக உடன்பிறப்புகள் ரசிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்குப் பின்னால் காங்கிரஸ் தரப்பில் ஏதோ திட்டம் இருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் பேசுகின்றன.

ஏற்கெனவே தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த ஆதரவு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் இந்தச் சர்ச்சை தமிழக அரசியல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது.

இதையும் படிங்க: மண்டியிட வைக்க சென்சார் போர்டை பயன்படுத்தும் மத்திய அரசு ... MP மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share