மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கும் வைகோவின் சமத்துவ நடைபயணம்?! காங்கிரஸ் புறக்கணிப்பு!! கூட்டணிக்குள் சலசலப்பு!!
திருச்சியில் இன்று, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ சமத்துவ நடைபயணத்தை துவக்குகிறார். நடைபயண துவக்க விழா அழைப்பிதழின் முன் அட்டையில், மறைந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் இடம் பெற்றுள்ளது.
திருச்சி: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க.) பொதுச்செயலர் வைகோ இன்று (ஜனவரி 2, 2026) திருச்சியில் இருந்து சமத்துவ நடைபயணத்தை தொடங்குகிறார். இந்த நடைபயணம் சமூகத்தில் சகோதரத்துவத்தை வலியுறுத்துவதற்கும், போதைப்பொருள் பயன்பாட்டை எதிர்ப்பதற்கும் நடத்தப்படுகிறது.
நடைபயண துவக்க விழாவுக்கான அழைப்பிதழின் முன் அட்டையில், மறைந்த விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் இடம்பெற்றுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய பிரபாகரனின் படம் கொண்ட விழாவில் பங்கேற்பது காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கு எதிரானது என்று தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கருதுகின்றனர்.
இதனால், அவர்கள் கட்சியின் தேசிய தலைமைக்கு புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து, டெல்லி தலைமை "அந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம்" என்று உத்தரவிட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வப்பெருந்தகை இந்த துவக்க விழாவில் பங்கேற்க மாட்டார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையும் படிங்க: தடையின்றி கிடைக்கும் போதைப்பொருள்!! தமிழகத்தில் காட்டாட்சி ராஜ்ஜியம்! அண்ணாமலை குற்றச்சாட்டு!
இதற்கிடையே, தி.மு.க. - காங்கிரஸ் இடையேயான உறவு குறித்து கருத்து தெரிவித்த வைகோ, செல்வப்பெருந்தகையின் பங்கேற்பு பற்றி எதுவும் கூறவில்லை. திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "தமிழக நலனுக்காக பல வழக்குகளை நீதிமன்றங்களில் தொடுத்து வெற்றி பெற்றுள்ளேன்.
ஜாதி, மத மோதல்களை தடுக்கவும், மக்கள் இணக்கமாக வாழ விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நடைபயணம் நடத்தப்படுகிறது. கூட்டணி தர்மத்தை மதித்து செயல்படும் கட்சியாக ம.தி.மு.க. உள்ளது. கூட்டணி கட்சிகளை புண்படுத்தும் வகையில் எந்த கருத்தும் கூற மாட்டோம்" என்றார்.
ம.தி.மு.க. முதன்மை செயலர் மற்றும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ பேசுகையில், "தமிழக பொருளாதாரம் குறித்து காங்கிரஸ் தரவு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி கூறிய கருத்துகள் தரவுகள் அற்றவை. அவை கண்டனத்துக்குரியவை.
அவர் தொடர்ந்து இதுபோன்ற கருத்துகளை கூறி கூட்டணிக்கும் காங்கிரஸுக்கும் சங்கடம் ஏற்படுத்துகிறார். காங்கிரஸ் தலைமை இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ராகுல் காந்தியுடன் நல்ல நட்பு உள்ளது. ம.தி.மு.க.வுக்கும் காங்கிரஸுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை" என்றார்.
இதையும் படிங்க: பார்த்தால் வெட்டுவேன், பேசினால் குத்துவேன்! கொலைவெறியுடன் திரியும் சிறார்கள்!!! நயினார் குற்றச்சாட்டு!