காங்., உண்மை கண்டறியும் குழு தலைவர் அட்ராசிட்டி! தலைதெறிக்க ஓடும் நிர்வாகிகள்! புலம்பல்!
சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்ததற்கான காரணங்களை ஆராய, காங்., தலைமை, உண்மை கண்டறியும் குழுவை அமைத்துள்ளது. இதில், முன்னாள் எம்.பி., ஜெயகுமார் தலைமையில் ஐந்து பேர் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை: சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்கான காரணங்களை ஆராய்வதற்காக காங்கிரஸ் கட்சி உண்மை கண்டறியும் ஐந்து பேர் குழு அமைத்துள்ளது. முன்னாள் எம்.பி. ஜெயகுமார் தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை வரவழைத்து விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணைக்கு வந்தவர்கள் தங்கள் கருத்துகளை சுதந்திரமாக தெரிவிக்கலாம் என எதிர்பார்த்த நிலையில், குழு தலைவர் ஜெயகுமார், “நான் பேசுவதை மட்டும் கேளுங்கள். வேறு யாரும் பேசக்கூடாது” என கண்டிப்புடன் உத்தரவிட்டார். நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் தனது கருத்தை முன்வைக்க முயன்றபோது, ஜெயகுமார் ஆவேசமாக எழுந்து பேசியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சில வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தி.மு.க. மீது குற்றம் சாட்டியபோது, ஜெயகுமார் அவர்களின் கருத்துகளை மறுத்து பதிலளித்தார். இந்த அணுகுமுறையால் அதிருப்தி அடைந்த பல கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் விசாரணைக்கு பாதியிலேயே வெளியேறினர்.
இதையும் படிங்க: குதிரை பேரமா.?- சிபிஐ விசாரணைக்கு ரெடி.. பதவி விலகிய பெருந்துறை எம்எல்ஏ சவால்..!
இதுகுறித்து உண்மை கண்டறியும் குழு உறுப்பினர் எஸ்.எம். இதயத்துல்லா கூறுகையில், “கூட்டத்திலிருந்து யாரும் பாதியில் வெளியேறவில்லை. எனக்கு மட்டும் அவசர வேலை இருந்ததால் முன் அனுமதி பெற்று ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே புறப்பட்டேன்” என்றார்.
இந்நிலையில், கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஸ்ரீநிதி, சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற விசாரணையில் பங்கேற்றார். அவர், “தேர்தல் தோல்விக்கு காங்கிரஸ் நிர்வாகிகளே காரணம்” என கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதன் தொடர்ச்சியாக, நேற்று சென்னை அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஸ்ரீநிதி தி.மு.க.வில் இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியில் தோல்விக்கான காரணங்களை ஆராயும் இந்த விசாரணை, உள்ளடி முரண்பாடுகளை மேலும் வெளிச்சத்துக்கு கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதையும் படிங்க: அல்வா மாதிரி வந்த வாய்ப்பு வீண்! ராஜ்யசபா சீட் அம்போ! காங்., உட்கட்சி பூசலால் ராகுல்காந்தி அப்செட்!