×
 

அமைச்சர் முன்னிலையில் திமுகவுக்கு தாவிய காங்., நிர்வாகி!! வெளிச்சத்திற்கு வந்த கூட்டணி விரிசல்?!

தி.மு.க-.,வுடன் கூட்டணியில் காங்கிரஸ் உள்ள நிலையில், அமைச்சர் முன்னிலையில், தி.மு.க.,வில் காங்., நிர்வாகி இணைந்தது, கூட்டணிக்குள் விரிசலா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் மாவட்ட நிர்வாகி ஒருவர், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த சம்பவம், கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

தேர்தல் முடிவுகள் வரும் வரை காத்திருக்காமல், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளரும், ஸ்ரீவைகுண்டம் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான பிச்சுவிளை சுதாகர், நேற்று முன்தினம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து தி.மு.க.வில் இணைந்தார். சட்டசபைத் தேர்தலில் கடும் பேச்சுவார்த்தைக்குப் பிறகே தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறுதியானது. ஆனால் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளிலும் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் சரியாக ஒத்துழைக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அமிர்தராஜுக்கு தி.மு.க. தரப்பில் ஒத்துழைப்பு இல்லாததால் கடைசி நேரத்தில் பணப் பட்டுவாடாவில் சுணக்கம் ஏற்பட்டது. மேலும் அவரது வீட்டில் இருந்து ஒரு கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அவருக்கு நெருக்கமானவர்களே பண விவரத்தை அதிகாரிகளுக்கு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பூத் ஏஜெண்டுகளுக்கு சிறப்பு கவனிப்பு!! ஆஃபர்களை அள்ளித் தெளிக்கும் திமுக! ,மு.க.ஸ்டாலின் திட்டம்!

காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கூறுகையில், “சுதாகர் காங்கிரஸ் பொறுப்பில் இருந்தாலும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளராகவே செயல்பட்டார். தொகுதி பொறுப்பாளராக இருந்தும் தேர்தல் பணியில் சரியாக ஈடுபடவில்லை என்று வேட்பாளர் அமிர்தராஜ் தரப்பினர் அவரை ஒதுக்கி வைத்தனர். 

இதனால் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் காங்கிரஸ் வேட்பாளருக்கு எந்த உதவியும் செய்யவில்லை. இதற்கு பதிலடியாகவே சுதாகரை தி.மு.க.வுக்கு இழுத்துச் சென்றுள்ளார் அமைச்சர்” என்றனர். சில காங்கிரஸ் நிர்வாகிகளும் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

தேர்தல் நெருங்கும் நிலையில் ஏற்பட்ட இந்த சம்பவம், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் உள்ள உள் முரண்பாடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளருக்கு தி.மு.க. தரப்பில் ஒத்துழைப்பு இல்லாதது, பணப் பறிமுதல், உள் கட்சி புகார்கள் என பல பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகின்றன. 

இந்த நிலையில் ஒரு முக்கிய காங்கிரஸ் நிர்வாகியின் திடீர் இணைப்பு, கூட்டணி உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை அதிகரித்துள்ளது. தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டு எண்ணிக்கைக்குப் பிறகு இந்த உள் பிரச்சினைகள் எப்படி தீர்க்கப்படும் என்பதை பார்க்க வேண்டும். 

இதையும் படிங்க: சொத்து விவரங்கள்..! அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share