தவெக + காங்கிரஸ் கூட்டணி... “ராகுல் காந்தியிடம் நேரடியாக கேட்போம்...” - செல்வப்பெருந்தகை ஓபன் டாக்...!
திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த மட்டுமே காங்கிரஸ் தலைமை குழு அமைத்துள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை திமுக, தவெக கூட்டணி பேச்சுவார்த்தை குறித்த சர்ச்சைகளுக்கு விளக்கமளித்துள்ளார்.
தவெக தலைவர் விஜயை, காங்கிரஸ் தலைமையக நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்த ஏன்? என்ற கேள்விக்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை, எங்களுக்கு அந்த மாதிரி எந்த தகவலும் வரவில்லை. காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அது மட்டுமே எனக்குத் தெரியும். நான் வேறு யாரையும் சென்று சந்திக்கச் சொல்லி அனுமதி கொடுக்கவில்லை என்றார்.
திமுகவை மிரட்டுவதற்காக காங்கிரஸ் இதுபோன்ற பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறதா? என்ற கேள்விக்கு, இதுபோன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க முடியுமா?. இந்தியா கூட்டணி என்பது இரும்புக்கோட்டை போல, வலிமையாக உள்ளது, பலமாக உள்ளது என பலமுறை தெரிவித்துள்ளோம். எத்தனை முறை உங்களுடைய சந்தேகத்தை சரி செய்வது என்றார்.
இதையும் படிங்க: 39 தொகுதி வேணும்!! திமுகவிடம் அடம் பிடிக்கும் காங்., ஐவர் குழு! தேர்தல் கணக்கு!
தொடர்ந்து பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற எம்.பி. ஜோதிமணியை செங்கோட்டையனை சந்தித்து மரியாதை நிமிர்த்தமாக நலம் விசாரித்தார். அதேபோல் தான் திருமண நிகழ்ச்சி ஒன்றில் திருநாவுக்கரசர், செங்கோட்டையனை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அதை எப்படி நீங்கள் சந்திப்பு என கூறலாம். ஏதாவது ஒரு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என முடிவெடுத்துவிட்டீர்கள். அப்படியெல்லாம் குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள். அகில இந்திய தலைமை திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஐவர் குழுவை நியமித்துள்ளனர். அந்த குழு முதற்கட்டமாக மரியாதை நிமிர்த்தமான பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளது. விரைவில் திமுக சார்பில் குழு அமைத்தவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.
கூட்டணிக்காக ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளதா? அல்லது திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளதா? என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு செல்வப்பெருந்தகை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவே குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார். அப்போது அவரை மீண்டும் இடைமறித்த செய்தியாளர் கூட்டணி என பொதுவாக சொல்வதால் தான் தவெக கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தவா? அல்லது திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவா? என்ற குழப்பம் வருகிறது எனக்கேட்டார். இந்த கேள்வியால் டென்ஷன் ஆன செல்வப்பெருந்தகை “நாங்கள் வேறு யாருடனாவது பேச்சுவார்த்தை நடத்த சென்றோமா?” என காட்டமாக பதிலளித்தார். நாங்கள் வேறு யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை, திமுகவுடன் மட்டுமே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
பிரவீன் காந்தி சந்தித்தது தொடர்பாக ஏதாவது புகைப்படம் வெளியானதா?. ஆனால் திமுகவுடன் ஐவர் குழு சந்தித்தது தொடர்பாக அதிகாரப்பூர்வ புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. பிரவீன் காந்தி சந்திப்பு குறித்து தற்போது தான் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கு பிறகு தான் காங்கிரஸ் தலைமைக்கு இதுதொடர்பாக தெரியப்படுத்துவோம். இந்த சந்திப்பு குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. ஒருவேளை சந்தித்திருந்தால் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும் எனக்கூறினார்.
இதையும் படிங்க: வாழ்த்துகள் அஜித்... நிரூபிச்சிட்டீங்க.! விருது வென்றுள்ள நடிகர் அஜித்துக்கு செல்வப் பெருந்தகை அன்பு மழை...!