மரியாதை இல்லைங்கிறத 20 நாள் தள்ளி வைங்க!! கனத்த இதயத்துடன் காங்., நிர்வாகிகள்! மாணிக்கம் தாகூர்!
''காங்., நிர்வாகிகள் அனைவரும் கனத்த இதயத் துடன்தான் இருக்கின்றனர்,'' என எம்.பி., மாணிக்கம் தாகூர் பேசினார்.
சென்னை: காங்கிரஸ் கட்சியினர் மனதளவில் கனத்த இதயத்துடன் இருந்தாலும், தேர்தல் நேரத்தில் பா.ஜ.-அ.தி.மு.க. கூட்டணியை தோற்கடிப்பதே முக்கிய நோக்கம் என மதுரை எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
மதுரை திருநகரில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், “கடந்த 22 ஆண்டுகால காங்கிரஸ்-திமுக கூட்டணியில் நமக்கு என்ன கிடைத்தது என்று பார்த்தால் மிகவும் சிக்கலான நிலையே உள்ளது. நம்மை கூட்டணிக்கு அழைக்கவில்லை, மரியாதை கொடுக்கவில்லை என்பதை இப்போதைக்கு 20 நாட்களுக்கு ஒதுக்கி வையுங்கள். நிர்வாகிகள் அனைவரும் கனத்த இதயத்துடன் இருக்கிறோம் என்பது எனக்கு தெரியும்” என்றார்.
மேலும், “ஏப்ரல் 23ஆம் தேதி மாலை 6 மணி வரை நம் தனிப்பட்ட பிரச்சினைகளை தள்ளி வைத்துவிட்டு, பா.ஜ. மற்றும் அதிமுக கூட்டணியை திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற விடக்கூடாது என்பதில் முழு கவனம் செலுத்த வேண்டும். கோட்சேவின் வாரிசுகளும், அமித் ஷாவின் வளர்ப்புகளும்தான் பா.ஜ. வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். அ.ம.மு.க. மற்றும் பா.ம.க.வை சிபிஐ, வருமான வரி துறையை காட்டி மிரட்டி அதிமுக தலைமையில் கூட்டணியில் சேர்த்தது பா.ஜ.தான்” என மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: விஜய்க்கு அட்வைஸ் சொன்ன விஜயபிரபாகரன் நிலை பரிதாபம்! தேமுதிகவுக்கு செக் வைத்த காங்.,!
திருப்பரங்குன்றம் தொகுதியில் பா.ஜ.-அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு எதிராக ஒருங்கிணைந்து போராட வேண்டும் என அவர் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்தார். காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் நிலவும் அதிருப்தியை ஒப்புக்கொண்டாலும், தேர்தல் முடியும் வரை அதை பின்னுக்குத் தள்ளி, பொது எதிரியை முதன்மைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்தப் பேச்சு காங்கிரஸ் உள்ளாட்சி நிர்வாகிகளிடையே பெரும் பேச்சாகியுள்ளது. நீண்டகால கூட்டணியில் இருந்தும் உரிய மரியாதை கிடைக்காத நிலையில், தேர்தல் நேரத்தில் மீண்டும் அதே கூட்டணியுடன் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. மாணிக்கம் தாகூரின் இந்த உரை, கட்சியினரின் உணர்வுகளை பிரதிபலிப்பதாகவும், அதேசமயம் தேர்தல் கட்டுப்பாட்டை வலியுறுத்துவதாகவும் அமைந்துள்ளது.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் உள் மோதல்கள் மற்றும் தேர்தல் உத்திகள் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
இதையும் படிங்க: காங்கிரசுக்கு யாரும் பாடம் எடுக்க தேவையில்லை..!! மம்தா பானர்ஜி பேச்சுக்கு மாணிக்கம் தாகூர் கடும் தாக்கு..!!