அமைச்சர் ஆனதும் சர்ச்சையில் சிக்கிய வன்னி அரசு!? விதி மீறலால் துறையின் ரகசியத்தன்மை கேள்விக்குறி!
'தாட்கோ' ஆய்வு கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., சிந்தனைச்செல்வன் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தலைமையில் தாட்கோ (தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்) அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. சிந்தனைச்செல்வன் பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 26-ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தாட்கோ தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு அமைச்சர் வன்னி அரசு தலைமை தாங்கினார். தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் அரசு பொறுப்பில் இல்லாத வி.சி.க. எம்.பி. ரவிக்குமார் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. சிந்தனைச்செல்வன் ஆகியோரும் பங்கேற்றது விதிமீறல் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரசு விதிகளின்படி, துறை சார்ந்த உள் ஆய்வுக் கூட்டங்களில் அதிகாரப்பூர்வ பொறுப்பில் உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால், அரசியல் பிரமுகர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டது துறையின் ரகசியத்தன்மை மற்றும் நிர்வாக பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என துறை அலுவலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தாட்கோவில் நிர்வாக ஒழுங்கீனத்தை வெளிப்படுத்துவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: முதலமைச்சரே தயவுசெய்து இதைச் செய்யாதீர்கள்... விஜய்க்கு விசிக ரவிக்குமார் பகிரங்க எச்சரிக்கை...!
அமைச்சர் வன்னி அரசு பதவியேற்ற பிறகு முதல் முறையாக நடத்திய முக்கிய ஆய்வுக் கூட்டத்திலேயே இந்த சர்ச்சை எழுந்துள்ளது. அதிகாரிகளின் ரகசிய ஆலோசனைகள், திட்ட விவரங்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட உணர்வுப்பூர்வமான தகவல்கள் அரசியல் பிரமுகர்களுக்கு முன்னால் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அமைச்சர் வன்னி அரசு மற்றும் தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் தமிழக அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு துறைகளில் அரசியல் தலையீடு அதிகரிப்பதாக எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி வருகின்றன. தாட்கோ போன்ற முக்கிய அமைப்புகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுங்கு காக்கப்பட வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: விசிகவுக்கு பதவி ஆசையா..? சிறுமைப்படுத்துறாங்க..! MP ரவிக்குமார் விளக்கம்..!