வைகோவின் நடைபயண அழைப்பிதழால் காங்கிரஸ் அதிர்ச்சி! செல்வப்பெருந்தை கலந்துகொள்வதில் சிக்கல்!
மதிமுக பொதுச்செயலர் வைகோ, மது ஒழிப்பு, போதை புழக்கத்தை எதிர்த்து ஜனவரி 2ல் திருச்சியிலிருந்து சமத்துவ நடைபயணம் துவங்குகிறார்.
மதிமுக பொதுச்செயலர் வைகோ, தமிழகத்தில் மது மற்றும் போதைப்பொருள் புழக்கத்தை எதிர்த்து ஜனவரி 2ஆம் தேதி திருச்சியிலிருந்து 'சமத்துவ நடைபயணம்' தொடங்க உள்ளார். இந்த நடைபயணத்தை தொடக்கி வைக்க முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வைகோ நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கினார்.
ஆனால், அழைப்பிதழின் முகப்பு அட்டையில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அழைப்பிதழில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க: பொண்டாட்டி சொன்னா கேட்கணும்... திருமண ஜோடிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை...!
பிரபாகரன் படம் இடம்பெற்றுள்ளதால், இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பங்கேற்கக் கூடாது என காங்கிரஸ் வட்டாரங்கள் வலியுறுத்தியுள்ளன. இந்திய இறையாண்மை மீது உறுதிமொழி எடுத்துக்கொண்ட முதல்வர் ஸ்டாலினிடம், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரபாகரன் படம் கொண்ட அழைப்பிதழை வழங்கியது தவறு என்று காங்கிரஸார் கருதுகின்றனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. நடைபயணத்தின் நோக்கம் மது மற்றும் போதைப்பொருளை தடுப்பது என்றாலும், அதை செய்ய வேண்டிய பொறுப்பு திமுக அரசுக்கு உள்ளது என்பதால், இந்த நடைபயணம் அரசுக்கு எதிரானதாகவே கருதப்படுகிறது.
இதில் காங்கிரஸ் பங்கேற்குமானால், திமுக அரசை எதிர்ப்பது போல ஆகிவிடும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரபாகரன் படம் இடம்பெற்றுள்ளதால், இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் சார்பில் யாரும் கலந்துகொள்ளக் கூடாது என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். வைகோவின் இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பணிந்தது வாய்க்கொழுப்பில் பேசிய வங்கதேசம்! மத்திய அரசு சரவெடி! டாக்கா பேரணி நிறுத்தம்!