எந்த ஷா வந்தாலும், தமிழ்நாட்டில் குஸ்கா தான்" - கோவையில் போஸ்டர் ஒட்டி திமுகவினர் கொக்கரிப்பு...!
கோவையில் அமித் ஷாவைக் கண்டித்து திமுகவினர் ஒட்டிய போஸ்டர் கவனம் ஈர்த்துள்ளது.
சமீபத்தில் அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மகாராஷ்டிரா, ஹரியானா, டெல்லி, சமீபத்திய பீகார் தேர்தல்களில் சுத்தமாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக விமர்சித்தார். மேலும் மம்தா பானர்ஜி, ஸ்டாலின் தயாராக இருங்கள். பீகாருக்கு அடுத்தப்படியாக மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி காலூன்ற உள்ளதாக எச்சரித்தார்.
தமிழக முதலமைச்சருக்கு மத்திய உள்துறை அமைச்சரே நேரடியாக சவால் விடுத்தது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளானதோடு, இதற்கு ஸ்டாலின் என்ன மாதிரியான பதிலடி கொடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.
அமித்ஷாவுக்கு பதில் அளிக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன? டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழகத்துக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும். தமிழகம் என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு அவுட் ஆப் கன்ட்ரோல் (Out of Control) தான்’’என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: ஒரே அறையில் பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி... 88 நிமிட காரசார விவாதம்... நடந்தது என்ன?
இந்நிலையில், கோவையில் அமித் ஷாவைக் கண்டித்து திமுகவினர் ஒட்டிய போஸ்டர் கவனம் ஈர்த்துள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் தங்களது எதிர்க்கட்சிகளை பல முனைகளில் விமர்சனம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் கோவையில் உக்கடம், டவுன்ஹால் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் திமுக.,வினர் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைக் கண்டித்துள்ளனர்.
அந்த போஸ்டரில், "எந்த ஷா வந்தாலும், தமிழ்நாட்டில் குஸ்கா தான்" என குறிப்பிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, செந்தில் பாலாஜி மற்றும் கோவை திமுக நிர்வாகிகள் படங்கள் இடம்பெற்றுள்ளன. கோவை மாநகர இளைஞர் அணியின் மாவட்ட துணை அமைப்பாளரான சி.எம்.எஸ். மருது என்பவர் போஸ்டர் ஓட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “நாக்கை அடக்கி பேசுங்க அமித் ஷா...” - எங்கள உடைச்சி துடைச்சி போட்டுடுவீங்களா? - வைகோ ஆவேசம்...!