விஜய்யை வஞ்சக வலையில் வீழ்த்த பாஜக முயற்சி! தவெக-வுக்கு முத்தரசன் எச்சரிக்கை!
தவெக தலைவர் விஜய்யையும் அதே வஞ்சக வலையில் வீழ்த்த பாஜக துடிக்கிறது என முத்தரசன் எச்சரித்துள்ளார்.
நடிகர் விஜய்யை வஞ்சக வலையில் வீழ்த்த பாஜக முயற்சி செய்கிறது; அதேபோல் பாஜக விரித்துள்ள வஞ்சகச் சிலந்தி வலையில் சிக்கித் தவிக்கும் அதிமுக, எதிர்காலத்தில் இல்லாமல் போகும் நிலை ஏற்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் எச்சரித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள ஞாயிறு பகுதியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் கலந்துகொண்ட முத்தரசன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீதான பாஜகவின் அரசியல் அழுத்தம், ‘ஜனநாயகன்’ படத் தணிக்கைச் சிக்கல் மற்றும் அதிமுகவின் அரசியல் எதிர்காலம் குறித்துத் தனது பாணியில் விளாசினார்.
செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், "மதரீதியாகவும், சாதி ரீதியாகவும் மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடச் சிலர் முயல்கிறார்கள்; இதற்குத் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஒத்துழைக்கக் கூடாது" என்றார். பொங்கல் பண்டிகை காலத்திலேயே தேர்வுகளை அறிவித்து, தமிழர் திருநாளை ஒன்றிய அரசு அலட்சியப்படுத்துவது கவலையளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், "தேர்தல் வரும்போது மட்டும் தமிழைப் புகழ்ந்து பேசிவிட்டு, நிதி ஒதுக்கீட்டில் சமஸ்கிருதத்திற்கும் இந்திக்கும் வாரி வழங்குவதும், தமிழுக்குக் கிள்ளிக் கொடுப்பதும் பாஜகவின் வெறுப்பு அரசியலையே காட்டுகிறது" எனச் சாடினார்.
இதையும் படிங்க: நாளை டெல்லி செல்கிறார் விஜய்.. பாதுகாப்பு தாங்க..!! டெல்லி காவல்துறைக்கு பறந்த கடிதம்..!!
தொடர்ந்து நடிகர் விஜய் குறித்துப் பேசிய அவர், "சென்சார் போர்டு மற்றும் சிபிஐ அமைப்புகளைப் பயன்படுத்தி விஜய்யை வஞ்சக வலையில் வீழ்த்த முடியுமா எனப் பாஜக பார்க்கிறது; அவர் நடித்துள்ள திரைப்படம் வெளிவருவதைத் தற்காலிகமாக வேண்டுமானால் தடுக்கலாமே தவிர, முற்றிலுமாக முடக்க முடியாது" எனத் தெரிவித்தார். அதிமுகவைப் பொறுத்தவரை, பாஜக விரித்துள்ள சிலந்தி வலையில் எடப்பாடி பழனிசாமி சிக்கியுள்ளார் என்றும், அவர் தனது கட்சியினரை நம்பாமல் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயை நம்பியே அரசியல் செய்வதாகவும் விமர்சித்தார். "மாநில அரசுகளைப் பழிவாங்கும் சர்வாதிகாரப் போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்" என வலியுறுத்திய முத்தரசன், 2026 தேர்தலில் மதச்சார்பற்ற சக்திகள் மீண்டும் வெல்லும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்தவர்..!! புரட்சிக் கலைஞருக்கு விஜய் புகழஞ்சலி..!!