விஜய் கேரவனுக்கு வேண்டுமானால் சிஎம் ஆகலாம், தமிழ்நாட்டிற்கு முடியாது - முத்தரசன் கடும் தாக்கு!
வெறும் 15 நிமிடம் கூட வெயிலில் நிற்க முடியாத விஜய், கேரவனுக்கு முதலமைச்சராகலாம் ஆனால், ஒருபோதும் தமிழ்நாட்டிற்கு முதலமைச்சராக முடியாது என்று முத்தரசன் விமர்சித்துள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறந்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் முத்தரசன் மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது அவர் இவ்வாறு பேசினார்.
சமீபகாலமாகத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தவெக தலைவர் விஜய்யைத் தாக்கிப் பேசிய முத்தரசன்,
வெறும் 15 நிமிடம் கூட வெயிலில் நிற்க முடியாதவர் விஜய். அவர் வேண்டுமானால் தனது கேரவனுக்கு (Caravan) முதலமைச்சராகலாம், ஆனால் ஒருபோதும் தமிழ்நாட்டிற்கு முதலமைச்சராக முடியாது" என எள்ளி நகையாடினார்.
பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருவதைக் குறித்துப் பேசுகையில் ஒரு காட்டமான பழமொழியைப் பயன்படுத்தினார். பிரதமர் மோடியின் தமிழ்நாடு சுற்றுப்பயணம் என்பது, திருநெல்வேலியில் சொல்வார்களே... 'நாய்க்கு வேலையில்லை, ஆனால் உட்கார நேரமில்லை' என்பது போலத்தான் இருக்கிறது. மோடி - அமித்ஷா கூட்டணி ஜனநாயகத்தையே குழிதோண்டிப் புதைக்கப் பார்க்கிறார்கள். ஆசியாவின் முதல் பணக்காரராக அதானியை மாற்றியதுதான் மோடி அடைந்த மாபெரும் வெற்றி" எனச் சாடினார்.
இதையும் படிங்க: விசில் கோலமிட்ட விஜய்! பெரம்பூரில் சத்தமே இல்லாமல் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட தவெக தலைவர்!
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியில் 'மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி' சார்பில் சிபிஎம் (CPIM) கட்சி வேட்பாளர் லதா போட்டியிடுகிறார். சாட்டியகுடி கடைத்தெருவில் லதாவிற்கு ஆதரவாக வாக்கு சேகரித்த முத்தரசன், பாஜக தலைமையிலான கூட்டணியை வேரோடு வீழ்த்த வேண்டும் எனத் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இதையும் படிங்க: விசில் சத்தம் காதை கிழிக்கப்போகுது..!! 21ம் தேதி நந்தனத்தில்.. பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசும் விஜய்..!!