தவெக ஆட்சிக்கு தற்போது ஆபத்தில்லை! ஆனா 5 வருசம் நீடிக்குமா? சிபிஎம் பாலகிருஷ்ணன் விமர்சனம்!
எதிர்காலத்தில் சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடைபெறும் சூழல் ஏற்பட்டால், அப்போது ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் கூறினார்.
தமிழகத்தில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிக்கு உடனடி ஆபத்து இல்லை என்றும், ஆனால் இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகள் முழுமையாக நீடிக்குமா என்பது தெரியாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் நடைபெற்ற போராட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக கூட்டணி மற்றும் எதிர்கால அரசியல் நிலவரம் குறித்தும் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார்.
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: ஓட்டுக்கு அதிக பணம் கொடுப்பது தவெகதான்! சிபிஎம் சண்முகம் வைத்த அதிர்ச்சி குற்றச்சாட்டு!
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், தேர்தல் ஆணையர் விவகாரத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
பாஜக தங்களின் கொள்கை எதிரி என்று தமிழக முதல்வர் கூறும் நிலையில், தேர்தல் ஆணையர் விவகாரம் தொடர்பாக அவர் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை என பாலகிருஷ்ணன் விமர்சித்தார். ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து தவெக தொடர்பான கேள்விகளுக்கும் பாலகிருஷ்ணன் பதிலளித்தார். குறிப்பிட்ட சூழலில் தவெகவுக்கு ஆதரவு அளிக்கப்பட்டதாகவும், அது எப்போதும் தொடரும் ஆதரவு என்று பொருள் கொள்ளக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார். எதிர்காலத்தில் சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடைபெறும் சூழல் ஏற்பட்டால், அப்போது ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும், தவெகவுடன் ஏற்கனவே ஒரு கூட்டணி இருப்பதாகவும், அதில் பாமக புதிதாக இணைந்தால் விசிகவின் நிலை என்னவாகும் என்றும் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். விசிக மற்றும் பாமக ஆகிய இரு கட்சிகளையும் ஒரே அரசியல் அணியில் வைத்திருப்பது தவெகவுக்கு சவாலாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
தவெக ஆட்சி குறித்து பேசிய பாலகிருஷ்ணன், தற்போதைய சூழலில் அந்த ஆட்சி உடனடியாக கவிழும் நிலை இல்லை என்றார். அதே நேரத்தில், ஆட்சி ஐந்து ஆண்டுகள் முழுமையாக நீடிக்குமா என்பது தெரியாது என்றும் அவர் கூறினார். அவரது இந்த கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: "நீலிக்கண்ணீர் நாடகம்"..! தவெக வேட்பாளர் சத்தியபாமாவை சாடிய தமிமுன் அன்சாரி..!!