×
 

த.வெ.க.வுக்கு ஆதரவா? தேர்தல் புறக்கணிப்பா? இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியின் முடிவு என்ன? இன்று தெரியும்!!

இன்று மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ள மாநிலக் குழு கூட்டத்தில் இடைத்தேர்தல் தொடர்பான அனைத்து அம்சங்களும் விரிவாக விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தமிழக அரசியலில் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று முக்கிய முடிவை எடுக்க உள்ளது.

தமிழகத்தில் த.வெ.க. தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருவதாகவும், அதற்கு மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இடைத்தேர்தல் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் மாநில செயற்குழு கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி உள்ளிட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பிணவறையை விட்டு வைக்காத ரீல்ஸ் வெறி..! படுபாதக செயல்... விளாசிய வானதி சீனிவாசன்..!!

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெ.சண்முகம், இடைத்தேர்தல் தொடர்பாக கட்சியின் இறுதி முடிவு இன்று நடைபெறும் மாநிலக் குழு கூட்டத்துக்குப் பிறகு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

திருச்சியில் இன்று மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ள மாநிலக் குழு கூட்டத்தில் இடைத்தேர்தல் தொடர்பான அனைத்து அம்சங்களும் விரிவாக விவாதிக்கப்படும் என்றும், அதன்பின்னர் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து கட்சியின் நிலைப்பாடு முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்தபோதே அதை ஆரோக்கியமற்ற அரசியல் மற்றும் சந்தர்ப்பவாத நடவடிக்கை என தங்கள் கட்சி விமர்சித்ததாகவும், அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் பெ.சண்முகம் தெரிவித்தார்.

அதே நேரத்தில், த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பதா, கூட்டணியில் இணைவதா என்ற கேள்விகளுக்கு, மாநிலக் குழு கூட்டத்தில் முழுமையாக விவாதித்த பின்னரே முடிவு எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இடைத்தேர்தலை புறக்கணிப்பதா அல்லது வேறு ஏதேனும் அரசியல் முடிவை எடுப்பதா என்பதும் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கத்தினாலும்., கதறினாலும் கட்டுமரக் கதை எடுபடாது..! திமுகவை கிண்டலடித்த தவெக..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share