சுத்த வேஸ்ட்... பதிலுரையில் பதிலே இல்லையே?... சி.எம்.விஜயை வெளுத்து வாங்கிய சிபிஎம் சண்முகம்...!
சட்டமன்றத்தை மக்கள் நலனுக்கு எந்த வகையிலும் எள்ளளவுக்கு கூட உதவாத தனிமனித தாக்குதல்களுக்கான இடமாகவோ அல்லது தங்கள் தலைவரை பாராட்டி பேசும் இடமாகவோ மாற்றுவது முற்றிலும் அறமற்ற செயலாகும்.
சட்டப்பேரவையில் முதலமைச்சரின் பதில் உரையில் எந்தப் பதிலும் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், சட்டம் ஒழுங்கு, காவல்துறை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் முதலமைச்சரின் பதில் உரையில் உரிய பதில் இடம்பெறவில்லை என்று தெரிவித்துள்ளார். மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்குப் பதிலாக, முழுக்க முழுக்க எதிர்க்கட்சியைக் குறிவைத்து அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகளே முதலமைச்சரின் உரையில் நிரம்பியிருந்ததாக அவர் கூறியுள்ளார்.
மத்திய அரசின் பிடியில் அனைத்து ஜனநாயக அமைப்புகளும் உள்ள நிலையில், அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளை மட்டும் குறிப்பிட்டு, அதை ஊழல் என வகைப்படுத்துவது எந்த வகையிலும் பொருத்தமானது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் ஆக இருந்த திரு.அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதும் சிறையில் அடைக்கப்பட்டதும் பின்னர் நீதிமன்றம் அந்தக் குற்றச்சாட்டுகளை உண்மை அல்ல என்று தள்ளுபடி செய்ததையும் நாடு அறியும். தோழர் பினராயி விஜயன் மீது தங்கக் கடத்தல் வழக்கு பதியும் அளவிற்கு ஆளும் கட்சியின் அடியாளாக அமலாக்கத்துறை நடந்து கொண்டிருப்பதை விபரம் அறிந்த அனைவரும் அறிவோம். எனவே அமலாக்க துறையின் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களாக முன்வைப்பது பொருத்தமானது அல்ல.
இதையும் படிங்க: குஜிலியம்பாறை விவகாரத்தில் வருத்தம் தெரிவித்தோம்! அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
அவசர நிலை காலத்தில் இந்தியாவில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக மிகப்பெரிய போராட்டங்களும் அதன் காரணமாக அடக்குமுறைகளும் அத்துமீறல்களும் நடந்தது நாடறிந்த வரலாறு. ஆனால் அவசரநிலை காலத்தில் முன்னாள் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டு அவரது தாடை உடைக்கப்பட்டது. உருவக் கேலி செய்யும் விதமாக பேசுவது யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது. அதை முதலமைச்சரே செய்திருப்பது பொறுப்பற்ற செயலாகும்.
சட்டமன்றத்தை மக்கள் நலனுக்கு எந்த வகையிலும் எள்ளளவுக்கு கூட உதவாத தனிமனித தாக்குதல்களுக்கான இடமாகவோ அல்லது தங்கள் தலைவரை பாராட்டி பேசும் இடமாகவோ மாற்றுவது முற்றிலும் அறமற்ற செயலாகும். கடுமையான அரசியல் ரீதியான விமர்சனங்களை, அதுவும் கூட நாகரீகமாக சட்டமன்றத்திற்கு வெளியே வைப்பதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்க முடியாது. ஆனால் ஏழை, எளிய மக்கள் உள்ளிட்ட தமிழக மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப்பணத்தில் நடைபெறும் சட்டமன்றத்தின் நேரத்தை மக்கள் நலனுக்காக அன்றி விரயம் செய்வது, அது யாராக இருந்தாலும் அதை ஏற்க முடியாது." என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: முக்கிய அரசியல் சந்திப்பு..! கம்யூனிஸ்ட் தலைவர்களை சந்தித்த அமைச்சர்கள்... அடுத்தகட்ட நகர்வா.?