×
 

ஆதவ் அர்ஜுனாவுக்கு கொலை மிரட்டல்.. போலீசுக்கு பறந்த புகார்.. வசமாக சிக்கிய ஒருவர்..!

ஆதவ் அர்ஜுனாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆதவ் அர்ஜுனா ஒரு தொழில்முனைவோராகவும், விளையாட்டு நிர்வாகியாகவும் பன்முகத் திறன்களைக் கொண்டவர். இவர் அரைஸ் கேப்பிட்டல் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும், 2021 முதல் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், 2023 முதல் இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். 

ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் பயணம் 2015 ஆம் ஆண்டு தொடங்கியது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பிரசாரங்களில் முக்கிய பங்காற்றியவர். இவர், 2016, 2019, மற்றும் 2021 ஆகிய தேர்தல்களில் திமுகவின் வியூக வகுப்பாளராகப் பணியாற்றினார். மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மேற்கொண்ட நமக்கு நாமே பயணத் திட்டத்தில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: படத்தை பார்த்தா தான் அழுகை வரும்.. நிஜ சம்பவத்துக்கு வராது.. முதல்வரை நார் நாராக கிழித்த ஆதவ் அர்ஜுனா..!

மேலும், பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் இணைந்து 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். 2021 ஆம் ஆண்டு, விசிகவின் தேர்தல் வியூகங்களை வகுக்கும் பொறுப்பை ஏற்றார். எனினும், 2024 டிசம்பரில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் திமுகவை விமர்சிக்கும் வகையில் பேசிய கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தின. இதனால், விசிக தலைவர் திருமாவளவன் அவரை ஆறு மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்தார். இதைத் தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்தார்.

தொடர்ந்து, 2025ம் ஆண்டு ஜனவரியில், ஆதவ் அர்ஜுனா நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அவர் தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். தவெகவில் இணைந்த உடனே, அவர் விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்து, அம்பேத்கர் மற்றும் பெரியார் இணைந்து நிற்கும் சிலையை பரிசாக வழங்கினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளானது.

இந்த நிலையில், ஆதவ் அர்ஜுனா தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார் தெரிவித்துள்ளார். ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகம் அருகே ஆயுதங்களுடன் சிலர் நோட்டமிட்டதாக புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தியாகராய நகர் காவல் துணையானையர் அலுவலகத்தில் அவர் புகார் கொடுத்துள்ளார்.. ஆட்டோ மற்றும் காரில் வந்த 7 முதல் 8 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் நோட்டமிட்டதாக அவர் கூறியுள்ளார். 

இதனைத்தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் தனிப்படை போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். தற்போது அந்த நபரிடம் போலீசார் இந்த கொலை மிரட்டலுக்கு பின்னணியில் யாரேனும் உள்ளனரா என்ற கோணத்திலும், யாருடைய உத்தரவின்படி ஆதவ் அர்ஜுனாவை நோட்டமிட்டனர் எனவும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் சந்தேக நபரை பிடித்து விசாரித்து வருவதாகவும் அவர் மீது தவறு இருக்கும் பட்சத்தில் அவர் கைது செய்யப்படுவார் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

இதையும் படிங்க: ஜனநாயக உரிமைகளை கேள்விக்குறியாக்கும் புதிய நடைமுறை.. ஆதவ் அர்ஜுனா வலியுறுத்துவது என்ன..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share