×
 

20 நாளில் ராஜினாமா செய்த தவெக வேட்பாளரை தோற்கடியுங்கள்! மதுராந்தகத்தில் பெ.சண்முகம் ஆவேசம்!

மதுராந்தகம் இடைத்தேர்தல் திணிக்கப்பட்ட தேர்தல் எனவும் தவெக வேட்பாளர் எக்காரணம் கொண்டும் வெற்றி பெறக் கூடாது எனவும் சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

வாக்களித்த தொகுதி மக்களைத் துளியும் மதிக்காமல் அதிமுகவிலிருந்து வெற்றி பெற்று 20 நாட்களிலேயே பதவி விலகி, அரசியல் ஆதாயத்திற்காக ஆளும் தவெகவில் இணைந்து தேர்தலைத் திணித்த சுயநல வேட்பாளர் எக்காரணம் கொண்டும் வெற்றி பெறக் கூடாது என்றும், மீண்டும் வெற்றி பெற்றால் அரசியல் லாபத்திற்காக மீண்டும் ராஜினாமா செய்வார் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயலாளர் பி.சண்முகம் மதுராந்தகத்தில் மிகக் காட்டமாக எச்சரித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, கருங்குழி பகுதியில் இடதுசாரி முன்னணியின் சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் பி.சுகந்தியை ஆதரித்து மாநிலச் செயலாளர் பி.சண்முகம் இன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்கள் மக்களின் விருப்பத்தால் வந்ததல்ல; அரசியல் ஆதாயத்திற்காக மக்களின் தலையில் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்ட தேர்தல்கள் ஆகும். 

அதிமுகவும் திமுகவும் சேர்ந்து ஆட்சி அமைக்க முயன்றதால் வெளியேறினோம் என்று தவெக வேட்பாளர்கள் இப்போது கட்டுக்கதை பேசுகிறார்கள்; அப்படியென்றால் அவர்கள் பதவி விலகிவிட்டு சுயேச்சையாக நின்றிருக்க வேண்டியதுதானே? மீண்டும் ஆளுங்கட்சியான தவெகவில் ஏன் போட்டியிடுகிறார்கள் என்ற நியாயமான கேள்வியைத் தொகுதி மக்கள் கட்டாயம் அவர்களிடம் கேட்க வேண்டும் என்று ஆவேசமாகக் கூறினார்.

இதையும் படிங்க: தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவில்லை! சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!

இடதுசாரிகளின் நிலைப்பாடு குறித்து விரிவாக விளக்கிய அவர், தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காக இடதுசாரிகள் அளித்த ஆதரவால்தான் தவெக ஆட்சி அமைத்தது. ஆனால், பதவி வெறிக்காக வாக்களித்த மக்களை ஏமாற்றி 20 நாட்களில் ராஜினாமா செய்த நபர்களுக்கு எப்படி மீண்டும் ஆதரவு அளிக்க முடியும்? அதேநேரம் திமுகவிற்கும் நாங்கள் ஆதரவளிக்க முடியாது; அதிமுக அணியிலோ பாசிச பாஜக அங்கம் வகிக்கிறது. 

இதன் காரணமாகவே இடதுசாரிகள் தனித்து நின்று உழைக்கும் பாட்டாளி மக்களின் பிரதிநிதியாகக் களம் காண்கிறோம். தவெக வேட்பாளர் எக்காரணம் கொண்டும் வெற்றி பெறவே கூடாது; அப்படி மீண்டும் வெற்றி பெற்றால் அடுத்த ஆதாயத்திற்காக மீண்டும் ராஜினாமா செய்து மக்களை நடுத்தெருவில் நிறுத்துவார் என்று மிகக் கடுமையாகச் சாடினார்.

தொடர்ந்து இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடிய பி.சண்முகம், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களின் கருத்துகளை மதிக்காமல் தன்னிச்சையாகவும், பாஜகவுக்கு வெளிப்படையாக ஆதரவாகவும் செயல்பட்டு வருவது அவர்களின் எதிர்ப்புக் கடிதங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது. 

உச்சநீதிமன்றம் வகுத்துக் கொடுத்த வழிகாட்டுதல்களை பாஜக அரசு ரத்து செய்ததால்தான் இத்தனை ஜனநாயகச் சீர்கேடுகள் அரங்கேறுகின்றன. வாக்காளர் சிறப்புச் சுருக்கத் திருத்த (SIR) நடைமுறையில் நாடெங்கிலும் 15 கோடி வாக்காளர்கள், குறிப்பாகப் பட்டியலின மற்றும் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளன.

பாஜக தனது ஆட்சியை நிலைநிறுத்த தேர்தல் ஆணையத்தை ஏவல் அமைப்பாக மாற்றி ஜனநாயகத்தின் அனைத்து சட்ட நெறிமுறைகளையும் காலில் போட்டு மிதித்துள்ளது. எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைப் பதவியிலிருந்து உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: எதற்கு ராஜினாமா.? எதற்கு இப்ப துடிக்கிறீங்க.? ஊழல் கோப்புகள் பற்றி கூறியதே விஜய் தான்... CPM சண்முகம் பரபரப்பு பேட்டி.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share