தாராபுரம் இடைத்தேர்தல்: 16-ம் தேதி தவெக வேட்புமனு! முதல்வர் விஜய் பிரசாரம்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த அப்டேட்!
ஆட்சியில் இருப்பவர்கள் விமர்சனங்களை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டிருக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் விமர்சனம் நேர்மையான நோக்கத்துடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.
ஈரோடு: தாராபுரம் இடைத்தேர்தல் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வரும் 16-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாகவும், அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் தாராபுரத்தில் தேர்தல் பரப்புரைக்கு வருவாரா என்பது குறித்து பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நடைபெற்ற தனியார் கார் நிறுவன திறப்பு விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கைத்தறித் துறை அமைச்சர் விஜய் பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.
முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்காக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். தமிழகத்தில் நிர்வாகம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக துறைவாரியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “யாருக்கு ஆதரவு என்பதை சொல்லுங்க!” கம்யூனிஸ்டுகளுக்கு நயினார் நாகேந்திரன் வைத்த செக்!
முதல்வர் விஜய்யை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா விமர்சித்தது தொடர்பான கேள்விக்கும் செங்கோட்டையன் பதிலளித்தார். ஆட்சியில் இருப்பவர்கள் விமர்சனங்களை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டிருக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் விமர்சனம் நேர்மையான நோக்கத்துடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார். மக்கள் நலன் சார்ந்த குறைகளை சுட்டிக்காட்டுவது வேறு, வேண்டுமென்றே விமர்சிப்பது வேறு என்றும் தெரிவித்தார்.
விமான நிலையம் தொடர்பான விவகாரத்திலும் முதல்வர் விஜய்யின் நிலைப்பாட்டை செங்கோட்டையன் விளக்கினார். நீர்நிலைகள், நஞ்சை நிலங்கள், வாய்க்கால்கள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு மக்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டதாகவும், தேர்தலுக்கு முன்பு அளிக்கப்பட்ட வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் மின்வெட்டை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் செங்கோட்டையன் கூறினார். காற்றாலை மின் உற்பத்தி கடுமையாக குறைந்துள்ள நிலையில், சூரிய மின்சாரத்தை சேமித்து இரவு நேரத்திலும் பயன்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். தாராபுரம் தேர்தல் பிரசாரத்தில் விஜய் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: ஆபாச பேச்சு தான் திமுகவின் ஆயுதமா?” ஆ.ராசா பேச்சுக்கு அமைச்சர் நிர்மல் குமார் கடும் பதிலடி!