×
 
☰

டாஸ்மாக் கடை முன்பு திடீர் தகராறு! 2 பேருக்கு அரிவாள் வெட்டு; 7 பேர் கைது! தலைமறைவானவரை தேடும் போலீஸ்!

தாமரைக்கண்ணன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து லோகநாதன் மற்றும் அவரது நண்பரான அன்புக்கரசன் (25) ஆகிய இருவரையும் தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் கோபால்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ஏற்பட்ட தகராறில் 2 பேரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 7 பேரை சாணார்பட்டி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கணவாய்பட்டி பங்களா பகுதியை சேர்ந்த அழகர்சாமியின் மகன் லோகநாதன் (22). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர், கோபால்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த தாமரைக்கண்ணன் (21) என்பவருக்கும் லோகநாதனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பழனி ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: பத்திர எழுத்தரை காவலில் எடுக்க சிபிசிஐடி மனு!

வாய்த்தகராறு சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தாமரைக்கண்ணன் தனது நண்பர்களை அழைத்ததாகவும், லோகநாதனும் தனது நண்பரை சம்பவ இடத்துக்கு வரவழைத்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தாமரைக்கண்ணன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து லோகநாதன் மற்றும் அவரது நண்பரான அன்புக்கரசன் (25) ஆகிய இருவரையும் தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதில் இருவருக்கும் தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அன்புக்கரசனுக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டதால் மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில், உதவி போலீஸ் சூப்பிரண்டு மஞ்சிமா மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் அடிப்படையில் தாமரைக்கண்ணன் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 19 முதல் 36 வயது வரையிலானவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அமர் என்ற அஷ்ரப்தீனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: 717 டாஸ்மாக் கடைகள் மூடியும் குறையாத மது விற்பனை! தமிழகத்தில் தினமும் 1 கோடி மது பாட்டில்கள் சேல்ஸ்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share