×
 

"கருத்து வேறுபாடுகளுடன் தொடர முடியாது"... சீமானுக்கு கடிதம் எழுதி விலகிய மு.களஞ்சியம்! நாதகவில் பரபரப்பு!

நாதக கட்சியிலிருந்து இயக்குநர் மு.களஞ்சியம் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கடிதம் மூலம் விலகுவதாக அறிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து இயக்குநர் மு.களஞ்சியம் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எழுதிய கடிதம் மூலம் தனது விலகல் முடிவை அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த முடிவு, சமீப காலமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் வெளியேறி வரும் சூழலில் முக்கிய அரசியல் பேசுபொருளாக மாறியுள்ளது.

கடந்த சில மாதங்களாக நாம் தமிழர் கட்சியில் மாநில நிர்வாகிகள் முதல் ஒன்றிய நிர்வாகிகள் வரை பலர் அக்கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். கடந்த மாதம், அக்கட்சியைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பேர் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதில் 8 மாவட்டச் செயலாளர்களும் இடம்பெற்றிருந்தது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது. அதனைத் தொடர்ந்து, மாநில கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த கோ. தமிழரசனும் அண்மையில் கட்சியில் இருந்து விலகினார்.

இந்த நிலையில், இயக்குநர் மு.களஞ்சியமும் தனது விலகல் முடிவை அறிவித்திருப்பது நாம் தமிழர் கட்சிக்குள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீமானுக்கு எழுதியுள்ள தனது கடிதத்தில், கருத்து வேறுபாடுகளுடன் தொடர்ந்து பயணிப்பது ஆரோக்கியமான அரசியல் சூழலை உருவாக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சாவின் விளிம்பில் சோனம் வாங்சுக்..! கண்டும் காணாமல் இருப்பதா..? சீமான் கண்டனம்..!!

மேலும், கட்சியின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் மாற்று அரசியல் கட்சித் தலைவர்களை விமர்சிக்கும் விதம் தனக்கு வருத்தம் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களே மற்ற கட்சியினரும் அவர்களது ஆதரவாளர்களும் மீது வெறுப்பை தூண்டும் வகையிலான அரசியலை முன்னெடுப்பது ஏற்க முடியாத ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார். இழிவான விமர்சனங்கள் தமிழ்த்தேசிய அரசியலின் அடிப்படை பண்பாட்டிற்கு பொருத்தமானவை அல்ல என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மு.களஞ்சியம், அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தார். தற்போது அவர் கட்சியில் இருந்து விலகியிருப்பது, அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. அவரது விலகல் குறித்து நாம் தமிழர் கட்சி தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: அம்பேத்கர் சிலை திறப்பு சிக்கல்..! இதைக் கூடவா செய்ய முடியல..? தவெகவை பந்தாடிய சீமான்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share