×
 

அதிமுகவுல இருந்து வந்தாதான் மவுசா? உழைச்ச தொண்டனுக்கு ஒன்னுமில்லையா? திமுகவில் போர்க்கொடி தூக்கும் நிர்வாகிகள்!

'அ.தி.மு.க.,விலிருந்து பலர் தி.மு.க.,வில் இணைந்து வருவதால், அ.தி.மு.க., அணியாக தி.மு.க., மாறி வருகிறது' என, ஒரிஜனல் உடன்பிறப்புகள் புகைச்சலில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் திமுகவின் உத்தி தெளிவாகத் தெரிகிறது. எப்படியாவது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற இலக்குடன், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை பலவீனப்படுத்தும் வகையில், அதிமுகவிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்களை திமுகவில் சேர்த்து வருகிறது.

முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, முன்னாள் எம்எல்ஏ புதுக்கோட்டை கார்த்திக் தொண்டைமான், முன்னாள் எம்பி மைத்ரேயன், பன்னீர்செல்வம் அணியில் இருந்த மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் போன்றோர் ஏற்கனவே திமுகவில் இணைந்தனர்.

இதன் உச்சமாக, பன்னீர்செல்வம் அணியில் இருந்த முன்னாள் அமைச்சரும் ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவுமான வைத்திலிங்கம் கடந்த 2021-ல் திமுகவில் சேர்ந்தார். அதைத் தொடர்ந்து, தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை அழைத்து பிரமாண்ட ஆதரவாளர்கள் இணைப்பு விழா நடத்தினார். அந்த விழாவில் அதிமுக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலரும் திமுகவில் இணைந்தனர்.

இதையும் படிங்க: யாருகூட கூட்டணினு சொல்லுங்க?! தொகுதி எத்தனைனு அப்புறம் பேசலாம்! தேமுதிக பிரேமலதாவுக்கு திமுக - அதிமுக ப்ரசர்!

ஆனால், இந்த 'அதிமுக அலை'யை திமுகவின் ஒரிஜினல் உடன்பிறப்புகள் ரசிக்கவில்லை. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் திமுக ஏற்கனவே வலுவாக இருக்கும் நிலையில், அதிமுகவினரை சேர்த்தால் நீண்ட காலமாக கட்சியில் உழைத்தவர்கள் புறக்கணிக்கப்படும் நிலை உருவாகும் என்று நேரு, டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட அமைச்சர்களிடம் திமுக நிர்வாகிகள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

அவர்களை சமாதானப்படுத்திய அமைச்சர் நேரு, "வரும் தேர்தலில் திமுக வென்று ஆட்சி அமைக்காவிட்டால் மத்திய பாஜக அரசு பல வழிகளில் நெருக்கடி கொடுக்கும். மோசமான நிலை ஏற்படும். எனவே கட்சியின் வெற்றிக்காகவே வைத்திலிங்கம் உள்ளிட்டோரை முதல்வர் ஸ்டாலின் சேர்த்துள்ளார். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், திமுக நிர்வாகி ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார். "அதிமுகவிலிருந்து வைத்திலிங்கம் போன்றோர் இணைவதால் திமுகவுக்கு பெரிய பலன் கிடைக்காது. யார் கட்சியில் இணைகிறாரோ அவர்களுக்குத்தான் பலன் கிடைக்கும். எப்படியிருந்தாலும் வைத்திலிங்கத்துக்கு ஒரத்தநாடு தொகுதி கொடுத்து விடுவார்கள். வென்றால் அமைச்சராகவும் ஆகிவிடுவார். எங்கள் பாடுதான் திண்டாட்டம்" என்று அவர் கூறினார்.

கடந்த 2021 திமுக அமைச்சரவையில் வேலு, ராமச்சந்திரன், ரகுபதி, முத்துசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், சேகர்பாபு, செந்தில் பாலாஜி என 8 முன்னாள் அதிமுகவினர் அமைச்சர்களாக இருந்தனர். இப்போது நடப்பதைப் பார்த்தால், அடுத்து திமுக ஆட்சி அமைந்தால் அமைச்சரவையில் பாதிக்கும் மேற்பட்டோர் முன்னாள் அதிமுகவினராக இருப்பார்கள் என்ற அச்சம் திமுகவின் ஒரிஜினல் உடன்பிறப்புகளிடம் நிலவுகிறது.

"அதிமுகவிலிருந்து பலர் திமுகவில் இணைந்து வருவதால், அதிமுக அணியாக திமுக மாறி வருகிறது" என்று உள்ளூர் நிர்வாகிகள் புகைச்சலுடன் கூறுகின்றனர். தற்போதைய நிலையைப் பார்த்தால், திமுக என்னும் 'புதிய அதிமுக'வை ஒரிஜினல் அதிமுக எதிர்த்து போட்டியிடும் சூழல் உருவாகி வருகிறது என்று அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: திமுக - அதிமுக இடையே தான் போட்டியே!! தடுமாறுது தவெக! அரசியல் ஆட்டத்தில் அவுட் ஆன விஜய்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share