Breaking News! இடைத்தேர்தலில் திமுக அதிரடி முடிவு! மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் மு.க.ஸ்டாலின்
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் ஏற்கெனவே அதிமுக வெற்றி பெற்றிருந்த நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான வாக்கு வித்தியாசமும் முக்கிய விவாதமாக இருந்தது.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா அல்லது புறக்கணிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார். இதன்படி மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் சுகன்யாவும் திமுக சார்பில் போட்டியிடுகின்றனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று காலை முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகள் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்ட நிலையில், திமுகவின் நிலைப்பாடு குறித்த எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்திருந்தது.
குறிப்பாக, கடந்த தேர்தல் நிலவரம் மற்றும் தொகுதிகளின் அரசியல் பலம் குறித்து திமுக தலைமை தீவிரமாக ஆலோசனை நடத்தியது. மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் ஏற்கெனவே அதிமுக வெற்றி பெற்றிருந்த நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான வாக்கு வித்தியாசமும் முக்கிய விவாதமாக இருந்தது.
இதையும் படிங்க: யாருக்கு வெற்றி வாய்ப்பு.? விறுவிறு அரசியல் களம்... இடைத் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் தொடக்கம்.!!
மேலும், தற்போது தவெக ஆளுங்கட்சியாக இருப்பதால் தேர்தல் களம் மேலும் சவாலானதாக மாறியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
இந்த சூழலில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்தில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இரண்டு தொகுதிகளிலும் திமுக களமிறங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்ட நிலையில், தற்போது ஸ்டாலின் இறுதி முடிவை எடுத்துள்ளார்.
இதன் மூலம் இடைத்தேர்தலை திமுக புறக்கணிக்குமா என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. மதுராந்தகத்தில் பரந்தாமனையும், தாராபுரத்தில் சுகன்யாவையும் வேட்பாளர்களாக அறிவித்துள்ள திமுக, இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் நிலையில் உள்ளது. இதனால் அதிமுக, தவெக, திமுக என மும்முனைப் போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் களமிறங்குமா திமுக? மு.க.ஸ்டாலின் இன்று எடுக்கப்போகும் முக்கிய முடிவு!