காங்கிரஸுக்கு ஆசை காட்டும் திமுக!! அசாம் தேர்தல் செலவை ஏற்பதாக பேரம்!! கூட்டணியை காப்பாற்ற தகிடுதத்தோம்!
தி.மு.க., கூட்டணியில் கடந்த 2004 முதல் உள்ள காங்கிரஸ், வரும் தேர்தலில் 41 தொகுதிகளும், ஆட்சியில் பங்கும் கேட்டு ஆளும் தரப்புக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் நீண்டகால கூட்டாளியான காங்கிரஸ் கட்சி தற்போது கடுமையான நெருக்கடி கொடுத்து வருகிறது. 2004 முதல் தொடர்ந்து தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து வரும் காங்கிரஸ், இம்முறை 41 தொகுதிகளை கேட்டு வலியுறுத்தி வருகிறது. மேலும், ஆட்சி அமைந்தால் ஆட்சியில் பங்கு (பவர் ஷேரிங்) வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளது. இதனால் தி.மு.க. தலைமைக்கு பெரும் சங்கடம் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் தரப்பில் ஒரு பிரிவினர், "தி.மு.க. இக்கோரிக்கைகளுக்கு உடன்படாவிட்டால், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் விஜய்யுடன் கூட்டணி அமைக்க வேண்டும்" என்று வலியுறுத்தி வருகின்றனர். ராகுல் காந்தியின் த.வெ.க. மீதான மென்மையான அணுகுமுறையும் தி.மு.க.வுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி 17-ஆம் தேதி டெல்லியில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் தி.மு.க. தலைமை, ராகுல் அல்லது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விரைவில் "தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு முடிவு" என்று அறிவிப்பார் என்று எதிர்பார்த்தது. ஆனால் அது நடக்கவில்லை.
இதையும் படிங்க: தவெகவா? திமுகவா? யாருடன் கூட்டணி?! காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் வைத்த ட்வீஸ்ட்!!
இந்நிலையில், காங்கிரஸை சரிக்கட்டும் வகையில் தி.மு.க. தலைமை புதிய உத்தியை வகுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி தற்போது பல மாநில தேர்தல்களில் நிதி பற்றாக்குறையால் தவித்து வருகிறது.
குறிப்பாக, அசாம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சி கைப்பற்ற ராகுல் காந்தி திட்டமிட்டுள்ள நிலையில், தேர்தல் செலவுகளுக்கு பணம் இல்லாதது பெரும் பிரச்சினையாக உள்ளது. இதை தி.மு.க. தனக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், "2011-ல் 63 தொகுதிகள், 2016-ல் 41 தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டன. ஆனால் 2021-ல் முதல்வர் ஸ்டாலின் வெறும் 25 தொகுதிகளை மட்டுமே கொடுத்தார். இப்போது த.வெ.க. என்ற மாற்று வழி இருப்பதால் 41 தொகுதிகளை பெற காங்கிரஸ் போராடி வருகிறது.
ஆனால் காங்கிரஸ் நிதி நெருக்கடியில் உள்ளது. எனவே தி.மு.க. 'அசாம் மாநில தேர்தல் செலவுகளை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் வேறு எந்த நெருக்கடியும் வேண்டாம்' என்று பேசி முடித்துள்ளது" என்றார்.
தி.மு.க. தரப்பில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும், கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. தி.மு.க. மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், "கூட்டணி தொடர்பான சதி முயற்சிகளுக்கு ஆளாகாதீர்கள். தொகுதி பங்கீட்டை நானே கவனித்துக் கொள்வேன்" என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தரப்பில் DMK உடன் தொடர்ந்து கூட்டணி என்று உறுதிப்படுத்தியுள்ளது, ஆனால் அதிக தொகுதிகள் மற்றும் மரியாதைக்கான கோரிக்கை தொடர்கிறது.
த.வெ.க.வின் எழுச்சி கூட்டணி அரசியலை மாற்றி அமைக்கும் சாத்தியம் உள்ள நிலையில், இந்த பேரம் பேச்சு தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமையலாம். கூட்டணி உறுதியா? அல்லது பிளவா? என்ற எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.
இதையும் படிங்க: எந்த கூட்டணிக்கு போகலாம்?! விஜய் வைத்த செக்! குழம்பி தவிக்கும் ஓபிஎஸ்! டிடிவி! பிரேமலதா!