ஸ்டாலின் vs காங்கிரஸ்: ‘எட்டப்பன்’ யார்? தமிழக அரசியலில் திடீர் மோதல்! பின்னணியில் என்ன நடக்கிறது?
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மீது, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கோபமாக உள்ளதால், தமிழக காங்கிரஸ் கட்சியினர், ஸ்டாலினை 'எட்டப்பன்' என மறைமுகமாக விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.
‘எட்டப்பன்’ விவகாரம் விஸ்வரூபம்! ஸ்டாலின் மீது காங்கிரஸ் பாய்ச்சல்... தி.மு.க., பதிலடி
சென்னை: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நடந்த அனைத்து கட்சி எம்.பி.,க்கள் கூட்டத்தை தொடர்ந்து, தி.மு.க.,–காங்கிரஸ் இடையே வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, ‘எட்டப்பன்’ என்ற விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தொகுதி மறுவரையறை தொடர்பாக முதல்வர் விஜய் தலைமையில் சென்னையில் அனைத்து கட்சி எம்.பி.,க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.,க்கள் பங்கேற்றனர். அதேநேரம், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.
இதுகுறித்து தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கனிமொழி, காவிரி விவகாரத்தை திசைதிருப்பும் நோக்கில் காங்கிரசை காப்பாற்றுவதற்காகவே இந்த கூட்டம் நடத்தப்பட்டதாக விமர்சித்தார். மேலும், த.வெ.க.,வை பின்னால் இருந்து இயக்குவது யார் என்பது மக்களுக்கு தெரியும் என்றும் அவர் காட்டமாக கூறினார்.
இதையும் படிங்க: விஜய் கூட்டம் நடந்த அதே நேரம்... ஸ்டாலின் வீட்டில் நடந்த ‘ரகசிய’ சந்திப்பு! திமுக எடுத்த புதிய முயற்சி!
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக காங்கிரஸ் தரப்பில் ‘கூட்டணி அரசியலின் எட்டப்பன் யார்?’ என்ற தலைப்பில் பதிவு வெளியிடப்பட்டது. கடந்த காலங்களில் தி.மு.க.,–காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்ட மாற்றங்கள், கூட்டணி முறிவுகள் உள்ளிட்ட அரசியல் நிகழ்வுகளை சுட்டிக்காட்டி அதில் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.
இதற்கிடையே, தி.மு.க.,வினர் காங்கிரஸ் மீது எதிர்வாதங்களை முன்வைத்துள்ளனர். காங்கிரசுக்கு நீண்ட காலம் ஆதரவளித்தது தி.மு.க.,தான் என்றும், ராகுல் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலும் ஸ்டாலினின் பங்கு இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அமைச்சர் பதவிக்காக கூட்டணி மாறுபவர்கள் யார் என்பதை தமிழக மக்கள் அறிவார்கள் என்றும் தி.மு.க., நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை பாதிக்கப்படும் என்று தெரிந்தும் மத்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரிப்பவர்கள் ‘நவீன எட்டப்பர்கள்’ என விமர்சித்தார். மேலும், இன்னும் வெளிப்படையாக அடையாளம் காணப்படாத சில எட்டப்பர்களும் இருப்பதாகவும், அவர்களை விரைவில் வெளிச்சத்துக்கு கொண்டு வருவோம் என்றும் அவர் கூறினார்.
முதல்வர் விஜய் கூட்டிய அனைத்து கட்சி எம்.பி.,க்கள் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு விமர்சிப்பது தமிழகத்துக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
அதேநேரம், ‘அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நண்பனும் இல்லை’ என்ற கருத்தை தி.மு.க., தரப்பு கூறியிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், அப்படியானால் தி.மு.க.,வின் புதிய நண்பர்கள் யார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
இதனால், த.வெ.க.,–காங்கிரஸ் கூட்டணி உருவான பின்னணியில் தி.மு.க.,–காங்கிரஸ் இடையிலான அரசியல் உரசல் வெளிப்படையாகி வருகிறது. ‘எட்டப்பன்’ விமர்சனத்தைத் தொடர்ந்து இரு தரப்பும் மேலும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தனித் தீர்மானம்...! முதல்வர் விஜய் தீர்மானத்தை ஆதரித்த திமுக..!