திமுகவில் தலித்துகளுக்கு 20% இடஒதுக்கீடு? மாவட்ட செயலர் பதவியை குறிவைக்கும் புதிய கோரிக்கை!
சமூக நீதியை முன்னிறுத்தும் கட்சியாக தி.மு.க., செயல்பட்டு வரும் நிலையில், கட்சியின் முக்கிய அமைப்பு பதவிகளிலும் அந்த கொள்கை பிரதிபலிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தி.மு.க.,வில் மாவட்ட செயலர் பதவிகளுக்கான மறுசீரமைப்பு மற்றும் உட்கட்சி தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் முன்வைத்துள்ள கோரிக்கை அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. மாவட்ட செயலர் பதவிகளில் தலித் சமுதாயத்தினருக்கு 20 சதவீத பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பதே அந்த கோரிக்கையாகும்.
தி.மு.க.,வில் மாவட்ட செயலர் பதவி முக்கிய அதிகாரம் கொண்ட பொறுப்பாக பார்க்கப்படுகிறது. தற்போது உள்ள 77 மாவட்ட செயலர்களில், தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மூவர் மட்டுமே இருப்பதாக அந்த சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால், கட்சியில் தலித் பிரதிநிதித்துவம் போதுமான அளவில் இல்லை என்ற விவாதமும் எழுந்துள்ளது.
சமீபத்திய தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, கட்சியின் அமைப்பு ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாவட்ட செயலர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், புதிய மாவட்ட அமைப்புகளில் தலித் சமுதாயத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என மறுசீரமைப்பு குழுவிடம் தலித் நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: மேட்டூர் அணை தாமத திறப்பால் 12 லட்சம் டன் நெல் இழப்பு! தவெக அரசை சாடும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
சமூக நீதியை முன்னிறுத்தும் கட்சியாக தி.மு.க., செயல்பட்டு வரும் நிலையில், கட்சியின் முக்கிய அமைப்பு பதவிகளிலும் அந்த கொள்கை பிரதிபலிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தலித் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களில், தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாவட்ட செயலர் பொறுப்பில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், நடைபெற உள்ள உட்கட்சி தேர்தலில் பண பலம் மற்றும் சமூக செல்வாக்கு கொண்டவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகலாம் என்ற கவலையையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். எனவே, தலித் சமுதாயத்தினருக்கு குறிப்பிட்ட அளவு பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கை தி.மு.க.,வின் மாவட்ட அமைப்பு மறுசீரமைப்பில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது, கட்சி தலைமையின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பொறுத்தே தெரியவரும்.
இதையும் படிங்க: எந்திர கோளாறு-னு தந்திர உருட்டா..! அறிவாலய அரைவேக்காடுகள்..! ஸ்டாலின் மனு தள்ளுபடியை விமர்சித்த தவெக..!!