×
 

பழைய முகங்களுக்கு குட்பை சொல்லுங்கள்! இனி தயக்கம் வேண்டாம்!’ ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள் கடிதம்!

அவருக்குப் பதிலாக புதிய மாவட்டச் செயலரை உடனடியாக நியமிக்காமல், தொகுதி பிரிப்பில் மாற்றம் செய்து பழைய மாவட்டச் செயலர்களிடமே பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பதாக அதில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சட்டசபை தேர்தல் தோல்வியை தொடர்ந்து திமுகவில் அமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாவட்டச் செயலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் கட்சித் தலைமை தயக்கம் காட்டக்கூடாது என திமுக நிர்வாகிகள் சிலர், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய அமைக்கப்பட்ட கள ஆய்வு குழு மற்றும் மறுசீரமைப்பு குழு, கட்சியின் அமைப்பில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, தற்போது உள்ள 78 மாவட்ட அமைப்புகளை 120-க்கும் மேல் அதிகரித்து, ஒரு மாவட்டச் செயலரின் கட்டுப்பாட்டில் இரண்டு அல்லது மூன்று சட்டசபை தொகுதிகள் மட்டுமே இருக்கும் வகையில் கட்சி அமைப்பை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீண்ட காலமாக மாவட்டச் செயலர் பதவியில் இருப்பவர்கள், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் தேர்தல் பணியில் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதாக கருதப்படும் நிர்வாகிகள் மாற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு திமுகவில் நிலவி வருகிறது. இளைஞரணியைச் சேர்ந்தவர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: MMDR சட்ட திருத்த மசோதா..! மாநிலங்களின் சுயாட்சி நிதி பறிபோகும் அபாயம்..! கனிமொழி MP எச்சரிக்கை.!!

இதற்கிடையே, மாவட்டச் செயலர்கள் மாற்றம் மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக கட்சிக்குள் பல்வேறு கருத்துகள் நிலவுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஸ்டாலின், உதயநிதி மற்றும் சபரீசன் தரப்புகளுக்கு இடையே சில விவகாரங்களில் கருத்து வேறுபாடு இருப்பதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் அமைப்பு மாற்ற நடவடிக்கைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை பெரிய அளவில் மாற்றங்கள் அறிவிக்கப்படவில்லை. செப்டம்பர் 15-ம் தேதி நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவுக்குப் பிறகு, அமைப்பு சீரமைப்பு நடவடிக்கைகள் வேகமெடுக்கலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ஸ்டாலினுக்கு எழுதப்பட்டதாக கூறப்படும் கடிதத்தில், கள ஆய்வு மற்றும் மறுசீரமைப்பு குழுக்கள் அறிக்கை அளித்து பல நாட்கள் கடந்தும், தேர்தல் தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டச் செயலர் தோப்பு வெங்கடாசலம் நீக்கப்பட்ட விவகாரத்தையும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக புதிய மாவட்டச் செயலரை உடனடியாக நியமிக்காமல், தொகுதி பிரிப்பில் மாற்றம் செய்து பழைய மாவட்டச் செயலர்களிடமே பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பதாக அதில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு நிர்வாகியை நீக்கினால் அவர் வேறு கட்சிக்கு சென்றுவிடுவாரோ, அதிருப்தி அடைவாரோ அல்லது அவருக்குப் பதிலாக யாரை நியமிப்பது என்ற தயக்கம் இருந்தால் கட்சி அமைப்பில் உண்மையான மாற்றத்தை கொண்டுவர முடியாது என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாவட்டச் செயலர்கள் நியமனம் தொடர்பாக வெளி ஆலோசனை நிறுவனங்களின் கருத்தை கேட்பதைவிட, ஸ்டாலின் நேரடியாக முடிவெடுத்து, தேவையான இடங்களில் பழைய நிர்வாகிகளுக்கு பதிலாக புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவில் எதிர்பார்க்கப்படும் மிகப்பெரிய அமைப்பு மாற்றம் இன்னும் முழுமையாக தொடங்காத நிலையில், கட்சிக்குள்ளேயே எழுந்துள்ள இந்தக் கடிதம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டச் செயலர்கள் மாற்றத்தில் ஸ்டாலின் எடுக்கப் போகும் முடிவே, கட்சியின் அடுத்தகட்ட அரசியல் செயல்பாட்டில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: திமுகவில் திடீர் விரிசல்! ஸ்டாலின், உதயநிதியை சந்திப்பதை தவிர்க்கும் செந்தில் பாலாஜி! விலக முடிவு?!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share