70+ சீனியர்களுக்கு சிக்கல்! பறிபோகுது மாவட்ட செயலர் பதவி?! திமுகவில் அதிரடி மாற்றம்! மு.க.ஸ்டாலின் கணக்கு!
தற்போது மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் சில முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளின் பதவிக்கும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தி.மு.க.வில் நிர்வாக ரீதியாக பல்வேறு அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, 70 வயதுக்கு மேற்பட்ட மாவட்ட செயலாளர்களின் பதவி பறிக்கப்படலாம் என்ற தகவல் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராயவும், கட்சியின் அமைப்பு ரீதியான செயல்பாடுகளை மேம்படுத்தவும் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் தி.மு.க. சார்பில் கருத்துகள் கேட்கப்பட்டன.
இந்த கருத்துகள் தொகுக்கப்பட்டு அறிக்கையாக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் கட்சியின் நிர்வாக கட்டமைப்பில் மாற்றங்கள் செய்வது குறித்து தலைமை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: "வாய்ப்பில்ல ராஜா"..! அதிமுகவுடன் கூட்டணியா..? கனிமொழி பளீச் பதில்..!!
தற்போது தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக 78 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். இவர்களில் கட்சி விதிமுறைகளை முறையாக பின்பற்றாதவர்கள் மற்றும் நீண்ட காலமாக ஒரே பதவியில் இருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, புதிய மாவட்டங்களை உருவாக்குவது மற்றும் மாற்றுக் கட்சிகளில் இருந்து தி.மு.க.வில் இணைந்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்குவது குறித்தும் ஆலோசனை நடைபெறுவதாக தெரிகிறது.
குறிப்பாக, 70 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இருந்து மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்படலாம் என்றும், ஒரே பதவியில் மூன்று முறைக்கு மேல் இருப்பவர்களையும் மாற்றுவதற்கான திட்டம் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒன்றிய, நகரம் மற்றும் பேரூர் அளவிலான கட்சி நிர்வாகிகளுக்கு 60 வயது வரை வயது வரம்பு நிர்ணயிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதனால், தற்போது மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் சில முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளின் பதவிக்கும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதேவேளையில், மூத்த மாவட்ட செயலாளர்களுக்கு கட்சியின் தலைமை அமைப்புகளில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மறுசீரமைப்பு மூலம் 40-க்கும் மேற்பட்ட புதிய முகங்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் வரும் 22-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தேர்தல் தோல்வி மற்றும் கட்சி மறுசீரமைப்பு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "டப்பிங் முதல்வர் விஜய்... அரைக்கால் காக்கி டவுசர் நிர்மல் குமார்"..! அப்பாவு கடும் விமர்சனம்.!!