2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை: கனிமொழி தலைமையில் 12 பேர் குழு! – தி.மு.க. அறிவிப்பு
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் 12 பேர் அடங்கிய திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அக்கட்சியின் தலைமை இன்று அறிவித்துள்ளது. தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் என மொத்தம் 12 பேர் இடம்பெற்றுள்ளனர்.
அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகத் திறன் கொண்டவர்கள் எனப் பலதரப்பட்ட நபர்கள் இந்தக் குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்:
திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் மற்றும் எம்.பி கனிமொழி கருணாநிதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில், அமைச்சர்கள்: பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி. ராஜா, கோவி செழியன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி சவால்: 2026-ல் தி.மு.க.வின் வெற்றி உறுதி; கோவையில் கூடுதல் வாக்குகளுக்கு இலக்கு!
டி.கே.எஸ். இளங்கோவன், எம்.எம். அப்துல்லா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், டாக்டர் எழிலன் நாகநாதன், கார்த்திகேய சிவசேனாபதி, தமிழரசி ரவிக்குமார் ஆகிய திமுக நிர்வாகிகள் இடம் பெற்றுள்ளனர்.
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜி. சந்தானம், 'கனவு தமிழ்நாடு' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் ஆகிய நிபுணர்கள் இடம் பெற்றுள்ளனர்.
தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பதற்காக இந்தக் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்தப் பயணத்தின் போது அவர்கள் பின்வரும் தரப்பினரைச் சந்தித்து ஆலோசனைகளை வழங்க உள்ளனர்:
விவசாயிகள், வணிகர்கள் மற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் பெண்கள் நல அமைப்புகள், சிறு, குறு நிறுவன உரிமையாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள், மாற்றுத்திறனாளிகள், வாகன ஓட்டுநர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் கோரிக்கைகளையும், எதிர்பார்ப்புகளையும் நேரடியாகக் கேட்டறிந்து, அவற்றின் அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில், குறிப்பாகத் தேர்தல் சமயங்களில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை 'தேர்தலின் கதாநாயகன்' என அரசியல் நோக்கர்களால் வர்ணிக்கப்படுவது வழக்கம். கடந்த காலங்களில் தி.மு.க. அறிவித்த பல்வேறு வாக்குறுதிகள் தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தையும், விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், 2026 தேர்தலுக்காகக் கனிமொழி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவின் மூலம் தயாராகப்போகும் தேர்தல் அறிக்கை, மீண்டும் ஒருமுறை பேசுபொருளாக மாறுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் இப்போதே எகிறியுள்ளது.
இதையும் படிங்க: "210 தொகுதியா? 70-ஐ கூட தாண்ட மாட்டார்கள்": எடப்பாடி பழனிசாமிக்கு வைகோ பதிலடி!