‘ஓரணியில் தமிழ்நாடு’.. வீடு வீடாக விசிட் அடித்த திமுக அமைச்சர்கள்.. ஸ்டாலின் டூ அன்பில் வரை ஃபுல் அப்டேட்..!
தமிழ்நாடு முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் ஓரணியில் தமிழ்நாடு சார்பில் மாபெரும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி, திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் வீடு வீடாகச் சென்று தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளது. மேலும் 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த பிறகு, மக்களின் ஆதரவை மேலும் தக்கவைக்கவும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கவும் திமுக இந்த பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளது.
ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்து, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு அருகே உள்ள வீடுகளுக்கு சென்று பிரசாரம் மேற்கொண்டார். வீடு வீடாக சென்று அரசின் சாதனைகளை மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் எடுத்துரைத்தார். இதனைத்தொடர்ந்து திமுகவின் முக்கிய தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வீடு வீடாகச் சென்று மக்களுடன் உரையாடி, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, கட்சியின் திட்டங்களை விளக்குகின்றனர்.
இதையும் படிங்க: ஓரணியில் தமிழ்நாடு: வீடு வீடாக சென்று பரப்புரையை தொடங்கியது திமுக..!
அதேபோல் தமிழ்நாடு முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் ஓரணியில் தமிழ்நாடு சார்பில் மாபெரும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அருப்புக்கோட்டையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன், விருதுநகரில் அமைச்சர் தங்கம் தென்னரசு, பட்டுக்கோட்டையில் அமைச்சர் கோ.வி. செழியன், சேலம் அம்மாபேட்டையில் அமைச்சர் ராஜேந்திரன், மதுரை வாடிப்பட்டியில் அமைச்சர் மூர்த்தி, வேலூரில் அமைச்சர் எ.வ.வேலு, விருத்தாச்சலத்தில் அமைச்சர் சி.வெ.கணேசன், புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி, கரூரில் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் அந்தந்த பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் பங்கேற்று, அங்கிருந்த மக்களிடையே அரசின் திட்டங்களை விளக்கிக்கூறினர்.
இதேபோல் திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோரும் வீடு வீடாக சென்று அங்குள்ள மக்களை சந்தித்து அரசின் திட்டங்கள் முறையாக வந்து சேர்ந்துள்ளதா? எந்த திட்டங்கள் உங்களுக்கு கிடைக்கவில்லை என கேட்டறிந்து உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டு வீட்டின் முன்பு ஓரணியில் தமிழ்நாடு என்ற வில்லையை ஒட்டினார்.
மேலும் உங்களுக்கு எந்த திட்டங்கள் கிடைக்கவில்லை என கூறினால் அதை பதிவு செய்யும்போது உடனடியாக அந்தத் திட்டம் உங்களை வந்து சேரும் எனவும் மக்களுக்கு உறுதியளித்தனர்.
இதையும் படிங்க: மதவாதத்திற்கு துணைபோகும் துரோகிகளுக்கு நிச்சயம் இடமில்லை.. கறார் காட்டிய மு.க.ஸ்டாலின்..!