×
 

முதல்வர் விஜய்யின் முதுகுதான் கரூர் நினைவு சின்னம்!! விளாசிய சிவசங்கர்! திமுக பதிலடி!

கரூர் துயர சம்பவத்திற்குப் பிறகு விமான நிலையத்தில் ஒரு வேக நடை போட்டாரே, அந்த முதுகுதான் கரூர் நினைவுச் சின்னமாக இருக்கும் என திமுக எம்.எல்.ஏ. சிவசங்கர் விமர்சித்தார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கிய நிகழ்ச்சியில், முந்தைய ஆட்சியை கடுமையாக விமர்சித்தது அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடி அளிக்கும் வகையில், திமுக முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான சிவசங்கர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து விஜயின் கருத்துகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தனது உரையில் திமுக ஆட்சியை விமர்சித்திருந்த முதலமைச்சர் விஜயின் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்த சிவசங்கர், அந்த சம்பவத்தின் பொறுப்பை திமுக மீது சுமத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், அந்த சம்பவத்திற்குப் பிறகு விஜய் எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் அவர் விமர்சனங்களை முன்வைத்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய சிவசங்கர், **"உங்கள் மீது உள்ள தப்பை எல்லாம் அழித்துவிட்டு கரூர் சம்பவத்தின் பழியை திமுக மேல் போட்டுள்ளீர்கள். எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரும் தன்னுடைய அரசியல் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் உயிரிழப்பதை விரும்ப மாட்டார்கள் என்றும் மிகப் பெருந்தன்மையாக எங்கள் தலைவர் சொன்னார். காரணம் அவர் உயர்ந்த உள்ளம் கொண்ட மனிதர். அவருக்கும் உங்களுக்கும் எந்த விதத்தில் ஒப்பிட முடியும்.

இதையும் படிங்க: சாட்டையை சுழற்றிய விஜய்... திமுக Ex.அமைச்சர் சிவசங்கர் தலையில் இறங்கியது பேரிடி... வெளியானது முக்கிய தகவல்....!

கரூரை விட்டு ஓடியது யார் என்பது மக்களுக்கு தெரியும். நீங்களாக உங்களை பெரிய மனிதராக நினைத்துக்கொண்டு பேசிக் கொண்டிருக்கிறீர்கள். எங்களுடைய தலைவருடன் உங்களை ஒப்பிட முடியாது.

குற்றம் சுமத்த வேண்டும் என முடிவு செய்திருந்தால் குற்றம் சுமத்தியதோடு இருக்க முடியாது, வழக்கே போட சொல்லி இருக்கலாம். வழக்கே போட்டு இருந்தால் என்ன நிலைமை என்று உங்களுக்கு தெரியும். பெருந்தன்மையாக ஒரு அரசியல் கட்சித் தலைவர் தன்னுடைய தொண்டர்கள் உயிரிழப்பதை விரும்ப மாட்டார்கள் என்று சொல்லி பெருந்தன்மை காட்டியதால் இன்று நீங்கள் மனதில் பட்டதை எல்லாம், வாயில் வந்ததை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

அடுத்தது ஒரு வசனம் சொல்லி இருக்கிறீர்கள், 'எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் மனதிற்கு ஏற்பட்ட காயங்களை மறக்க முடியாது. நிறைய வலிகள், நிறையக் காயங்களை தாண்டி தான் வந்துள்ளேன். என் வாழ்வில் அதிக வலி காயம் கொடுத்தது கரூர் சம்பவம் தான். மக்களை சந்திக்கவும் மக்களிடம் பேசவும் கரூருக்கு வந்தேன்' என்று விஜய் சொல்லியுள்ளார். ஆனால் வந்தது எத்தனை நாட்கள் கழித்து? சம்பவம் முடிந்து 250 நாட்களுக்கு மேலாகிவிட்டது. அப்பொழுதுதான் திமுக ஆட்சி உங்களை கரூருக்கு செல்லவிடாமல் தடுத்தது என்றால், உங்கள் ஆட்சி அமைந்தே இரண்டு மாதம் ஆகிவிட்டது. கரூர் துயர சம்பவத்திற்குப் பிறகு விமான நிலையத்தில் ஒரு வேக நடை போட்டாரே, அந்த முதுகுதான் கரூர் நினைவுச் சின்னமாக இருக்கும்."** என்று விமர்சித்தார்.

சிவசங்கரின் இந்தக் கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

 

இதையும் படிங்க: முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க விஜய்! முதல்வர் சொன்ன குட்டி ஸ்டோரி! சிவசங்கர் கொதிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share