திமுகவின் கோரிக்கைக்கு ஜனாதிபதி மாளிகை மௌனம்? எம்.பிக்களை சந்திக்க மறுக்கும் திரவுபதி முர்மு?!
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விவகாரங்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதும் சந்திப்பு தாமதத்துக்குக் காரணமாக இருக்கலாம் என திமுக வட்டாரங்களில் கருத்து நிலவுகிறது.
தேர்தல்களை மீண்டும் பழைய ஓட்டுச்சீட்டு முறையில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஜனாதிபதி திரவுபதி முர்முவைச் சந்தித்து மனு அளிக்க திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரம் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து இதுவரை சந்திப்புக்கான அனுமதி கிடைக்கவில்லை எனக் கூறப்படுவது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கட்சியா.? போதைப்பொருள் கூடாரமா.? செய்தியாளர்களுக்கு மிரட்டல்..! உதயநிதி கண்டனம்.!!
வாக்காளர் பட்டியலில் தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவதாகக் குற்றம்சாட்டிய திமுக, சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனத் தீர்மானித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானங்களை ஜனாதிபதியிடம் நேரில் அளிக்க, திமுக எம்.பி.க்கள் அனைவரும் ஒன்றாகச் செல்ல வேண்டும் என்று ஸ்டாலின் அறிவுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தைத் தொடர்புகொண்டு சந்திப்புக்கான நேரம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அதற்கான பதில் இதுவரை கிடைக்கவில்லை என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, விடுமுறை காரணமாகச் சந்திப்புக்கான அனுமதி தாமதமாகியிருக்கலாம் என திமுக நிர்வாகிகள் கருதுவதாகக் கூறப்படுகிறது. நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் போராட்டத்தின் ஒரு பகுதியாக, சுமார் 85 லட்சம் கையெழுத்துகள் அடங்கிய மனுக்கள் ஏற்கெனவே ஜனாதிபதி அலுவலகத்தில் அளிக்கப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விவகாரங்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதும் சந்திப்பு தாமதத்துக்குக் காரணமாக இருக்கலாம் என திமுக வட்டாரங்களில் கருத்து நிலவுகிறது. எனினும், ஜனாதிபதி அலுவலகம் சந்திப்பை நிராகரித்ததாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
தங்களது கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரை சட்டரீதியான போராட்டத்தைத் தொடரப்போவதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான நேரம் எப்போது ஒதுக்கப்படும் என்பதும், இந்தக் கோரிக்கைகள் அடுத்தகட்டமாக எந்த அரசியல் நகர்வுக்கு வழிவகுக்கும் என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அலட்சியத்தால் தொடரும் கொலைகள்..! விஜய் அரசை வெளுத்த ஸ்டாலின்..!!