திமுகவில் புது குழப்பம்! தியாகராஜன் இருந்தவரை சூப்பர்! உதயநிதி மோசம்!
திமுகவில் தகவல் தொழில்நுட்ப அணியினரை கண்டுகொள்ளாமல், தி.மு.க., தலைமை புறக்கணித்து வருவதாக, அவ்வணியைச் சேர்ந்தோர் கொந்தளிப்பில் உள்ளனர்.
சென்னை: திமுக இளைஞரணிக்கு கட்சி தலைமை அதிக முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், தகவல் தொழில்நுட்ப அணியினர் (ஐடி விங்) கட்சி தலைமையால் புறக்கணிக்கப்படுவதாக கொந்தளித்துள்ளனர். இளைஞரணி வடக்கு மண்டல மாநாடு திருவண்ணாமலையில் சிறப்பாக நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இளைஞரணிக்கு கட்சியில் முக்கிய இடம் கிடைத்திருப்பதாக உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கு நேர் எதிர்மறையாக, தகவல் தொழில்நுட்ப அணியினர் கட்சி தலைமையின் அலட்சிய போக்கால் ஏமாற்றமும் கோபமும் அடைந்துள்ளனர். தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் சிலர் இது குறித்து கூறுகையில், “அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஐடி அணி செயலராக இருந்தபோது, மண்டல அளவில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. கலந்துகொள்பவர்களுக்கு உணவு, பயணச் செலவு, மொபைல் போன் போன்றவை வழங்கப்பட்டன” என்றனர்.
தற்போது கட்சி தலைமை ஐடி அணியினரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். “சமூக வலைதளங்களில் கட்சிக்காக தீவிரமாக உழைக்கிறோம். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு உடனடியாக பதிலடி கொடுக்கிறோம். அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம். தற்போது நடைபெற்று வரும் மாணவர் சேர்க்கை (SIR) பணிகளிலும் எங்கள் பங்களிப்பு அதிகம்” என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? தேர்தல் பணி தரமா இருக்கணும்... திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஒன் டூ ஒன் ஆலோசனை...!
ஆனால், இளைஞரணிக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், இது “ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு” போன்ற நிலையை உருவாக்கியிருப்பதாகவும் ஐடி அணியினர் வேதனை தெரிவித்தனர். கட்சி தலைமையின் இந்த செயல் ஒரு தரப்பினரின் உற்சாகத்தை குலைத்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
திமுகவில் அணிகளுக்கு இடையே முக்கியத்துவ வேறுபாடு ஏற்பட்டிருப்பது கட்சி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தனியா 40 சீட்டு எனக்கு கொடுங்க!! இளைஞரணிக்காக வரிந்து கட்டும் உதயநிதி! ஸ்டாலின் யோசனை!