×
 

திமுகவில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு கடும் போட்டி! உதயநிதி ஆதரவாளர்கள் புகைச்சல்!

நீண்ட காலமாக மாவட்டச் செயலாளர் பதவியில் உள்ள சில மூத்த நிர்வாகிகள் அந்தப் பொறுப்பில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

திமுகவில் அமைப்பு ரீதியான சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், புதிய மாவட்டச் செயலாளர்கள் குறித்த அறிவிப்பு மீண்டும் தள்ளிப்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கட்சியின் இளைஞரணி நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2026 சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு திமுக தனது அமைப்பை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் ஒரு பகுதியாக, அமைப்பு மாவட்டங்களின் எண்ணிக்கையை 77-ல் இருந்து 110 ஆக உயர்த்த கட்சி முடிவு செய்தது. இரண்டு சட்டசபைத் தொகுதிகளுக்கு ஒரு அமைப்பு மாவட்டம் என்ற அடிப்படையில் புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டச் செயலாளர் பதவிக்கு அதிகபட்ச வயது 70 எனவும், தொடர்ந்து இரண்டு பதவிக்காலங்களுக்கு மேல் வகிக்கக் கூடாது எனவும் புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் நீண்ட காலமாக மாவட்டச் செயலாளர் பதவியில் உள்ள சில மூத்த நிர்வாகிகள் அந்தப் பொறுப்பில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு மாநில அல்லது மண்டல அளவில் மாற்றுப் பொறுப்புகள் வழங்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க: அமைச்சர் நிர்மல் குமார் மீது அவதூறு வழக்கு பாயும்! திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ எச்சரிக்கை!

இந்த மாற்றங்களின் மூலம் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு மாவட்ட அளவில் அதிக பொறுப்புகள் வழங்கப்படலாம் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. இளைஞரணி நிர்வாகிகளுக்கு முக்கிய பதவிகள் வழங்குவது தொடர்பாகவும் கட்சிக்குள் ஆலோசிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவித்தன.

இதனிடையே, புதிய மாவட்டச் செயலாளர்களுக்கான பட்டியல் தயாராகிவிட்டதாகவும், ஆனால் சில மூத்த நிர்வாகிகளின் எதிர்ப்பால் இறுதி அறிவிப்பு தாமதமாகி வருவதாகவும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. முப்பெரும் விழாவிலும் புதிய மாவட்டச் செயலாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகாத நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களுக்கு பிறகு அறிவிப்பு வெளியாகலாம் என்ற தகவல் தற்போது பரவி வருகிறது.

இளைஞர்களிடையே கட்சியின் செயல்பாட்டை வலுப்படுத்தவும், புதிய தலைமுறைக்கு அதிக பொறுப்புகளை வழங்கவும் மாவட்ட அளவிலான மாற்றங்களை விரைவாக அறிவிக்க வேண்டும் என ஒரு தரப்பு வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. அதேநேரம், அனுபவம் வாய்ந்த நிர்வாகிகளின் பங்களிப்பை எவ்வாறு தொடரச் செய்வது என்பது குறித்தும் தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் 110 அமைப்பு மாவட்டங்களுக்கான புதிய மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் எப்போது வெளியாகும் என்பது திமுகவில் தற்போது முக்கிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: ஜெம் வீரமணியிடம் பணம் வாங்கியவர்கள் யார்.? திமுக ஆட்சியில் எவ்வளவு பணம் கைமாறியது.? விசாரணை குழு அமைப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share