அய்யா தரப்புக்கு 3 தொகுதி!! திமுக - பாமக டீல் ஓவர்! அமைச்சர் எ.வ.வேலு தலையீட்டால் திருமாவளவன் டென்சன்!
பாமகவின் ராமதாஸ் அணிக்கு திமுக தரப்பில் 3 தொகுதிகள் வரை ஒதுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் பாமக ராமதாஸ் அணி இணைவதா? என்பது தொடர்பான பரபரப்பு உச்சத்தை தொட்டுள்ளது. பாமகவின் ராமதாஸ் அணிக்கு 3 தொகுதிகள் வரை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் எவ.வேலு இந்த டீலை முடித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த முடிவு விசிக தலைவர் திருமாவளவன் ஏற்பாரா என்பதைப் பொறுத்தே இறுதியாக எடுக்கப்படும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாமக தற்போது இரு அணிகளாக பிளவுபட்டுள்ளது. அன்புமணி ராமதாஸ் தரப்பு அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், ராமதாஸ் தரப்பு திமுகவை நோக்கி நகர்ந்து வருகிறது. அன்புமணி தரப்பு மாம்பழ சின்னத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளது, இது ராமதாஸை மேலும் கொந்தளிப்படையச் செய்துள்ளது. எடப்பாடி பழனிசாமியோ அல்லது அன்புமணியோ ராமதாஸ் குறித்து எந்த பதிலும் அளிக்காதது இந்த பிளவை மேலும் தெளிவுபடுத்துகிறது.
ராமதாஸ் தரப்பு நிர்வாகிகள், குறிப்பாக ஜிகே மணி, அருள் உள்ளிட்டோர் திமுக நிர்வாகிகளுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். திமுகவும் வட மாவட்டங்களில் வன்னியர் வாக்கு வங்கியை முழுமையாக பெறுவதற்கும், அதிமுகவின் வாக்குகளில் ஓட்டை போடுவதற்கும் ராமதாஸ் அணியை இணைப்பதில் ஆர்வம் காட்டுகிறது. இதனால் 3 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்ய திமுக தலைமை முன்வந்துள்ளதாகவும், ராமதாஸ் அணி அதை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதையும் படிங்க: ராமதாஸ் வந்தால் விசிக விலகும்! திமுகவுக்கு செக் வைக்கும் திருமாவளவன்! தவெகவுக்கு சிக்னல்!!
ஆனால், இங்கேயே பெரும் சிக்கல் உள்ளது. விசிக தலைவர் திருமாவளவன் 14 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறார் – பாமக அல்லது பாஜக இருக்கும் எந்த கூட்டணியிலும் விசிக இணையாது என்று தெளிவாக கூறி வருகிறார்.
இந்த ஐடியாலஜி அடிப்படையிலான எதிர்ப்பு மாற்றமின்றி தொடர்கிறது. திமுக தலைமைக்கு இது மிகப்பெரிய சவாலாக உள்ளது. விசிகவுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, ராமதாஸ் அணியை சேர்ப்பதற்கு ஒப்புக்கொள்ளுமாறு திருமாவளவனிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற யோசனையும் எழுந்துள்ளது.
பிப்ரவரி முதல் வாரத்தில் திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட உள்ள நிலையில், அனைத்து கூட்டணிக் கட்சிகளும் தங்களுக்கு சாதகமான தொகுதிகளின் பட்டியலை தயார் செய்து வைத்துள்ளன. இன்னும் சில நாட்களில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருமாவளவனின் முடிவு இந்த கூட்டணியின் வலிமையை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும். ராமதாஸ் அணி இணைந்தால் திமுகவுக்கு வட மண்டலத்தில் பெரும் பலம் கிடைக்கும், ஆனால் விசிகவை இழக்க நேரிடும் அபாயமும் உள்ளது.
தமிழக அரசியலில் இந்த விவகாரம் பெரும் திருப்புமுனையாக அமையும் என்பது உறுதி. திமுக தலைமை எப்படி இந்த சமநிலையை கையாளப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதையும் படிங்க: ராமதாஸ் வந்தால் விசிக விலகும்! திமுகவுக்கு செக் வைக்கும் திருமாவளவன்! தவெகவுக்கு சிக்னல்!!