×
 

விஜய்யின் கரூர் பயணத்திற்கு எதிர்ப்பு.. சுப்ரீம் கோர்ட்டில் திமுக இடையீடு..!! இன்று விசாரணை..!!

சி.பி.ஐ. அதிகாரிகள் சம்பவ இடத்திலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் விசாரணை நடத்தினர்.

கரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்ச்சிக்காக முதலமைச்சர் விஜய் வரும் 10-ம் தேதி கரூர் செல்லும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய உதவி வழங்கும் நடவடிக்கைகள் தொடருமா என்பது நீதிமன்ற முடிவைப் பொறுத்தே அமையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த 2025 செப்டம்பர் 27-ம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட பயங்கர நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதுகாப்புக் காரணங்களால் முதலமைச்சர் நேரில் செல்ல முடியாத நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மாமல்லபுரம் அழைத்து தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.

இந்த வழக்கை உச்சநீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான கண்காணிப்புக் குழு மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது. சி.பி.ஐ. அதிகாரிகள் சம்பவ இடத்திலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் விசாரணை நடத்தினர். முதலமைச்சர் விஜய் இருமுறை டெல்லியில் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்தார். விசாரணை இன்னும் முழுமையடையவில்லை.

இதையும் படிங்க:  கரூர் உயிரிழப்பு வழக்கு: தவெக மேல்முறையீட்டு மனு ஜூலை 13-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

இந்நிலையில், தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகு, உயிரிழந்த 41 குடும்பங்களில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளுடன் முதலமைச்சர் கரூர் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி சி.பி.ஐ. விசாரணையை பாதிக்கும் என்று கூறி தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில் வழக்கறிஞர் அனுராதா அற்புதம் மூலம் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் சமீபத்திய பேச்சு வழக்கின் சாட்சியங்களை பாதிக்கும் வகையில் உள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், விசாரணை முடியும் வரை முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோர் பொதுவெளியில் கருத்து தெரிவிக்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய நிகழ்வுகளுக்கு முன்பாக சி.பி.ஐ. அனுமதி பெறும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஹுஸேபா அகமதி ஆஜராகி, “சாட்சிகளை கலைக்கும் நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது” என்று வாதிட்டார். அதன்படி நீதிபதிகள் ஆமானுல்லா கான், ஷீல் நாகு அமர்வு இந்த முறையீட்டை ஏற்று, இன்று நீதிபதிகள் விஸ்வநாதன், ஆலோக் ஆராதே தலைமையிலான அமர்வு விசாரிக்க ஒப்புக்கொண்டது.

இந்த வழக்கின் தீர்ப்பு பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உதவித் திட்டத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். ஒருபுறம் அரசின் நல்லெண்ண உதவி, மறுபுறம் விசாரணையின் நேர்மை என இரு முக்கிய அம்சங்களும் சமநிலைப்படுத்தப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
 

இதையும் படிங்க: கரூர் துயரத்தின் மர்மம் விலகுமா? செந்தில் பாலாஜி இல்லத்தில் விசாரணை..! களமிறங்கிய சிபிஐ அதிகாரிகள்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share