முதல்வர் மருமகனுக்கு ராஜ்யசபா எம்.பி பதவி?!! திமுகவில் நடக்கும் திடீர் ஆலோசனை!! கூட்டணிக்கும் சலசலப்பு!
தி.மு.க.,வில் காலியாக உள்ள நான்கு ராஜ்யசபா எம்.பி., பதவிகளில், ஒன்றில் முதல்வரின் மருமகன் சபரீசனை நிறுத்த தி.மு.க., தலைமை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 2, 2026 அன்று நான்கு ராஜ்யசபா எம்பி பதவிகள் காலியாக உள்ள நிலையில், திமுக தலைமை இதற்கான திட்டமிடல்களை தீவிரப்படுத்தியுள்ளது. தற்போதைய எம்பிக்களான திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ் (பி. செல்வராஜ்), கனிமொழி ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைவதால், திமுகவுக்கு நான்கு சீட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதில் இரண்டு சீட்களை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க திமுக மேலிடம் திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக, ஒரு சீட் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படும் என்றும், மற்றொன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக்) அல்லது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) போன்ற கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படலாம் என்றும் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
மீதமுள்ள இரண்டு சீட்களில் ஒன்றை முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலினின் மருமகனும், வழக்கறிஞருமான சபரீசனுக்கு (வி. சபரீசன்) வழங்குவது குறித்து கட்சி உயர்மட்டத்தில் தீவிர ஆலோசனை நடைபெற்று வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மற்றொரு சீட் தற்போதைய டெல்லி பிரதிநிதியும், திமுக மூத்த நிர்வாகியுமான ஏ.கே. விஜயனுக்கு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இலவம் காத்த கிளி தேமுதிக!!! 21 தொகுதி ஒரு எம்.பி சீட்டு!! பிரேமலதா போட்டு வைத்த அரசியல் கணக்கு!
கட்சி நிர்வாகிகள் சிலர் கூறுகையில், "கனிமொழி துணை பொதுச்செயலராகவும், லோக்சபா எம்பியாகவும் இருப்பதால், அவர் மாநில அரசியலுக்கு வர வாய்ப்புள்ளது. அப்போது டெல்லி அரசியலில் ஸ்டாலினுக்கு நெருக்கமானவராக சபரீசனை ஈடுபடுத்த வேண்டும் என்று மாவட்டச் செயலர்கள் சிலர் முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளனர். இதனால், கிடைக்கும் நான்கு சீட்களில் ஒன்றை சபரீசனுக்கு ஒதுக்கி, அவரை வெற்றி பெற வைத்து டெல்லிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது" என்றனர்.
சபரீசன் ஏற்கனவே திமுகவின் பின்னணியில் முக்கிய முடிவுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருபவர். டெல்லியில் மத்திய அரசுடன் லாபி செய்வதற்கு நெருக்கமான ஆள் தேவை என்ற கருத்து கட்சியில் வலுப்பெற்றுள்ளது. இதனால், அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்குவது ஸ்டாலின் குடும்பத்தின் அரசியல் செல்வாக்கை டெல்லியில் விரிவுபடுத்தும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இருப்பினும், இது குறித்த இறுதி முடிவு இன்னும் உறுதியாகவில்லை. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள், கட்சி உள் ஆலோசனைகள் ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ராஜ்யசபா தேர்தல் நெருங்கும் நிலையில், திமுகவின் வேட்பாளர் பட்டியல் எப்போது அறிவிக்கப்படும் என்பது அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சபரீசனின் பெயர் உறுதியானால், அது கட்சியில் புதிய விவாதங்களை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: திமுக தலையில் பேரிடி!! 2011 தேர்தலில் கொளத்துாரில் கொட்டிய பணம்! சுப்ரீம் கோர்ட்டில் அடுக்கிய துரைசாமி!