×
 

இடதுசாரிகளுக்கான அங்கீகாரத்தை திமுக தர மறுத்தது! கூட்டணிக்கும் மனக்கசப்பு? CPI(M) குற்றச்சாட்டு?!

'இடது சாரிகளுக்கான அங்கீகாரத்தை தி.மு.க., வழங்க மறுத்து விட்டது' என மா.கம்யூ., அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

விழுப்புரம்: தமிழக சட்டசபைத் தேர்தல் களம் முற்றிலும் வித்தியாசமானதாக உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். 

நிருபர்களிடம் அவர் பேசுகையில், “பல கருத்துக் கணிப்புகள் வந்தாலும், தமிழகத்தில் பா.ஜ.வுக்கு இடமில்லை என்பதை அவை உறுதிப்படுத்தியுள்ளன. பிரதமர் மோடியும் அமித் ஷாவும் படை எடுத்தாலும் தமிழக மக்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள்” என்றார்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நல்ல சதவீதத்தில் வெற்றி பெறும் என எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், தி.மு.க. ஆட்சி அமைந்தால் அதன் செயல்பாடுகளை கவனித்தே தங்கள் நிலைப்பாடு இருக்கும் என்றும் அவர் கூறினார். 

இதையும் படிங்க: ஓட்டு மெஷினை காவல் காப்பதில் சுணக்கம்! கோட்டை விடும் தவெக வேட்பாளர்கள்! புது புகார்!

“தேர்தலின்போது மா.கம்யூ. மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்ட குறைந்தபட்ச 6 தொகுதிகளைக் கூட தி.மு.க. வழங்கவில்லை. இடது சாரிகளுக்கு உரிய அங்கீகாரத்தை தர மறுத்துவிட்டது” என பாலகிருஷ்ணன் வேதனை தெரிவித்தார்.

இருப்பினும், பா.ஜ.வை தடுக்கும் நோக்கத்தில் கூட்டணிக்குள் எந்த இடையூறும் ஏற்படுத்தாமல் இடது சாரிகள் முழு மூச்சுடன் பணியாற்றியதாக அவர் சுட்டிக்காட்டினார். மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்தால் அது மக்களுக்கானதாக இருக்க வேண்டும் என்றும், இல்லையெனில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் எச்சரித்தார்.

தமிழகத்தில் வேலையில்லா பிரச்சனை, ஒப்பந்தப் பணி நியமனம், தொழிலாளர்கள் மீதான ஒடுக்குமுறை உள்ளிட்ட பல குறைபாடுகளை கடந்த தி.மு.க. ஆட்சியும் சரிசெய்யத் தவறியதாக பாலகிருஷ்ணன் விமர்சித்தார். 

ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சங்க உரிமைக்காக போராடிய முத்துக்குமரன் போன்றோரை தேர்தல் நேரத்தில் சிறையில் அடைத்ததைச் சுட்டிக்காட்டிய அவர், “தொழிலாளர்கள் மீதான ஒடுக்குமுறை தொடர்ந்தால் பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுப்போம்” என்றார்.

தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும் என இளைஞர்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டுள்ளதை வரவேற்ற அவர், ஈரான் மீதான போர் காரணமாக சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவின் செயல்பாடுகளை இந்திய அரசு கண்டிக்கத் தவறியதாகவும் விமர்சித்தார்.

இதையும் படிங்க: கடைசி வரை கரூரில் ஏன் வாக்களிக்க வரவில்லை! கோவை தெற்கில் என்ன பணி?! செந்தில் பாலாஜி விளக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share