×
 

பறிபோன நகராட்சி தலைவர் பதவி.. சங்கரன்கோவிலில் சலசலப்பு.. பின்னணி என்ன..?

சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக இருந்த திமுகவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி தனது பதவியை இழந்தார்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சி மொத்தம் 30 வார்டுகளை கொண்டது. உள்ளாட்சி தேர்தலில் 12 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்றது. திமுக 9 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மதிமுக 2 வார்டுகளிலும், காங்கிரஸ், எஸ்டிபிஐ தலா ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.

திமுக சார்பில் உமா மகேஸ்வரி, அதிமுக சார்பில் முத்துலெட்சுமி ஆகியோர் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். மதிமுக, காங்கிரஸ், எஸ்டிபிஐ, சுயேச்சை கவுன்சிலர்கள் ஆதரவுடன் உமா மகேஸ்வரிக்கு 15 வாக்குகளும், அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்துலெட்சுமிக்கு 15 வாக்குகளும் கிடைத்தன. இருவரும் சமநிலை அடைந்ததால் குலுக்கல் முறையில் நகராட்சி தலைவராக உமா மகேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

இதையும் படிங்க: வேடிக்கை பாக்குறது மட்டும்தான் வேலையா? முதல்வர் ஸ்டாலினை விளாசிய நாயினார்..? அடுக்கும் கேள்விகள்..!

இந்நிலையில் சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக இருந்த திமுகவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி சரவணன், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் தனது பதவியை இழந்தார். இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் கொண்டுவரப்பட்டது. 

உமா மகேஸ்வரி மீது, மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்யத் தவறியதாகவும், தெரு விளக்கு அமைப்பது, சாலை அமைப்பது போன்ற பணிகளில் நகர்மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன

இதனால், நகர்மன்ற உறுப்பினர்கள் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இந்தத் தீர்மானம் நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 30 நகர்மன்ற உறுப்பினர்களில், 28 பேர் உமா மகேஸ்வரிக்கு எதிராக வாக்களித்தனர். இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக, எஸ்டிபிஐ மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் அடங்குவர். ஒரு உறுப்பினர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதனிடையே உமா மகேஸ்வரி, திமுக மாவட்டச் செயலாளரும், சங்கரன்கோவில் எம்எல்ஏவுமான ராஜா மீது அதிருப்தி கொண்டிருந்தார். இந்த உட்கட்சி மோதல், நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் திமுகவின் உள்ளூர் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் உட்கட்சி ஒற்றுமையை பலப்படுத்த வேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
 

இதையும் படிங்க: கூட்டணிக்கு வேட்டு வைக்க பாக்குறாங்க.. கப்சிப்புனு இருங்க.. அமித்ஷா பிறப்பித்த ரகசிய உத்தரவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share